Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ரூ.135 கோடியில் 32 புதிய குடிநீர் திட்டங்கள்

Print PDF

தினமணி 23.04.2010

ரூ.135 கோடியில் 32 புதிய குடிநீர் திட்டங்கள்

புதுச்சேரி, ஏப்.22: புதுச்சேரியில் ரூ.135 கோடியில் 32 புதிய குடிநீர் திட்டங்கள் கண்டறியப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பொது சுகாதாரத்துறை அமைச்சர் எ. நமச்சிவாயம் பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: வரும் நிதியாண்டில் ரூ.195 கோடியில் 32 புதிய குடிநீர் திட்டங்கள் கண்டறியப்பட்டு நபார்டு அல்லது ஹட்கோ வங்கி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: நகரப் பகுதியில் கடல் நீர் ஊடுருவுவதாலும் கிராமங்களில் சில பகுதிகளில் இரும்புத் தாது அதிகம் உள்ளதாலும் நீரின் சுவை மாறியுள்ளது. பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தரமான குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் புதுவை ரெயின்போ நகரில் ரூ.20 லட்சத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, விரைவில் சுய உதவிக்குழுக்கள் மூலம் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் ரூ.7 விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.

இது போன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் புதுச்சேரியில் ஐயனார் நகர் (உப்பளம் தொகுதி), விடுதலை நகர் (முதலியார்பேட்டை தொகுதி) ஆகிய 2 இடங்களிலும், காரைக்காலில் அக்கரைவட்டம், காரைக்கால் மேடு ஆகிய இடங்களிலும் உடனடியாக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். நகர மற்றும் கிராமப் பகுதிகளில் முடிவடையாத 18 குடிநீர் திóட்டங்கள் ரூ.35.11 கோடிக்கு அரசின் ஒப்புதல் பெற்று பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. புதுவை நகருக்குட்பட்ட மண்டலம் 1-ல் உள்ள அனைத்து குடிநீர் விநியோக குழாய்களை ரூ.60 கோடி செலவில் மாற்றும் திட்டம் அடுத்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். ஊசுடு ஏரி மற்றும் கரையாம்புத்தூர், மணமேடு ஆகிய கிராமங்களில் இருந்து தொலை தூர நீராதாரங்கள் மூலம் புதுவை நகருக்கு குடிநீர் வினியோகம் முறையான ஆய்வுக்கு பின் மேற்கொள்ளப்படும்.

கழிவு நீர் திட்டம்: நெல்லித்தோப்பு மற்றும் அதனை சார்ந்த விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் ரூ.7.30 கோடியில், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும். புதுச்சேரி நகர பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் வீதியிலிருந்து குருசுகுப்பம் பம்ப் ஹவுஸ் வரை உள்ள கான்கிரீட் குழாய்களை பெரிய விட்டமுள்ள இரும்பு குழாய்களாக மாற்ற சுமார் ரூ.3 கோடி அளவில் வரும் நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து கழிவு நீர் குழாய்களில் உள்ள அடைப்புகளை சுத்தம் செய்து, சுத்தம் செய்வதை சிசிடிவிசி மூலம் ஊர்ஜிதம் செய்துகொள்ளும் பராமரிப்பு பணிகள் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். முத்துலிங்கம்பேட்டை மற்றும் பாரி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப்படும்.

காரைக்கால் குடிநீர் திட்டம்: காரைக்கால் நகரின் மையப்பகுதிக்கான குடிநீர் வழங்கும் அபிவிருத்தி திட்டத்தின் மதிப்பீடு, ரூ.38.39 கோடிக்கு தயாரிக்கப்பட்டு, நகர அபிவிருத்தி திóட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெருவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். காரைக்கால் நகரின் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களுக்கான குடிநீர் வழங்கு அபிவிருத்தி திட்டங்கள் முறையே ரூ.50.51 கோடிக்கும், ரூ.44.88 கோடிக்கும் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் பெற அனுப்பப்பட்டுள்ளது.

கிராமப்பகுதிகளுக்கான குடிநீர் வழங்கு திóட்டங்களில் கோட்டுச்சேரி குயவன் குளத்து பேட், திருநள்ளார் மேலசுப்புராயபுரம், காரைக்கால் புத்தமங்கலம் பேட், கீழ்ஓடுதுறை பேட், நடுஓடுதுறை பேட் ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மாஹே குடிநீர் திட்டம்: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பந்தக்கல், பள்ளூர், செருகல்லாய், கிழக்கு பள்ளூர் மற்றும் மாஹே டவுன் பகுதிகளில் 70 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். ஹட்கோ நிதியுதவியுடன் ரூ.105 லட்சம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க நில ஆர்ஜிதம் செய்யப்படும். குடிநீர் தேவையை நிறைவேற்றும் பொருட்டு சுமார் 100 கி.மீ. அளவிற்கு ரூ.16.5 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோக குழாய்கள் அமைக்கப்படும்.

யேனம் குடிநீர் திட்டம்: தெüலேஸ்வரம் அணையில் இருந்து யேனம் வரை உள்ள 75 கி.மீ. தூரம் குழாய் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 23 April 2010 10:30
 

கொளுத்துது வெயில்: வறண்டது கிணறுகள் குடிநீர் சப்ளையில் திணறுது வாலாஜா நகராட்சி

Print PDF

தினமலர் 23.04.2010

கொளுத்துது வெயில்: வறண்டது கிணறுகள் குடிநீர் சப்ளையில் திணறுது வாலாஜா நகராட்சி

வாலாஜாபேட்டை:வாலாஜாவில் குடிநீர் எடுக்கும் பாலாற்று கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு போனதால் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கி விட்டது.

வாலாஜாபேட்டையில் தினசரி வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்பது மாறி, 3 நாளுக்கு ஒருமுறை கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் நகரத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதோடு மழையும் இல்லாமல் போய்விட்டது.

மேலும் பாலாற்றில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வந்த குடிநீர்கிணறுகள் அனைத்தும் நீர் இல்லாமல் உள்ளது.பாலாற்றில் மணல் சுரண்டப்பட்டு வரும்நிலையில் அவ்வப்போது குடிநீர் கிணறுகளில் சுரக்கும் நீரும் மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை கூட விநியோகிக்க போதுமானதாக இல்லை. குடிநீரை தேடி சேமித்து விநியோகம் செய்ய முயன்றால் மின்சாரம் சதி செய்கின்றது.

கீழே தள்ளியது குதிரை என்றால் பள்ளமும் பறித்தது' என்பது போல மின் தடையை தாண்டி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டால் கொக்கு மீனை கவ்வுவது போல நகரத்தில் வசதி படைத்தவர்கள் பலர் வீடுகளில் மின் மோட்டார் வைத்து மொத்த குடிநீரையும் தங்கள் வீட்டிற்கே உறிஞ்சிக் கொள்கின்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் குடிநீருக்கு அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தற்போது கோடைக்காலம் நிலவுவதால் கொளுத்தும் வெயிலில் குடிநீருக்காக மக்கள் அலைய தொடங்கி விட்டனர்.ஏற்கெனவே தமிழக அரசு வாலாஜா நகராட்சிக்கு அனுப்பியிருந்த உத்தரவில் நகரத்தில் விநியோகிக்கும் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எச்சரித்திருந்தது. நகராட்சி நிர்வாகம் வேறு வழியின்றி தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீரையே குளோரின் மருந்து கலந்து தூய்மைபடுத்தி முடிந்த வரை தரமாக விநியோகம் செய்து வருகிறது.

அதற்கும் மின் மோட்டார் வைத்து உறிஞ்சிக் கொள்பவர்கள் மூலம் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை அறிந்த நகராட்சி சேர்மன் நித்தியானந்தம், கமிஷனர் பாரிஜாதம், பொறியாளர் ஆனந்தஜோதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் பேரில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சி எடுப்பதை சட்ட விரோத செயல் என்பதை தெரிந்தும் அவ்வாறு ஈடுபடுபவர்கள் வரும் 25ம் தேதிக்குள் நிறுத்திக் கொள்ளா விட்டால் மின் மோட்டாரை பறிமுதல் செய்வதுடன் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேர்மன் நித்தியானந்தம் எச்சரித்துள்ளார்.

 

மாவட்டத்தில் பெய்த மழையால் 26 குடிநீர் திட்டங்கள் தப்பின

Print PDF

தினமலர் 23.04.2010

மாவட்டத்தில் பெய்த மழையால் 26 குடிநீர் திட்டங்கள் தப்பின

தேனி:தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் 26 கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு புத்துயிர் கிடைத்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு, வைகை ஆற்று படுகையில் 26 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உள்ளன. ஆற்றில் நீர் வரத்து இல்லாவிட்டால் குடிநீர் திட்டங்கள் வறண்டு விடும். கடந்த ஐந்து மாதமாக தேனி மாவட்டத்தில் மழை இல்லாததாலும், பெரியாற்றில் நீர் திறக்கப்படாததாலும் 26 குடிநீர் திட்டங்களிலும் உள்ள பம்பிங் கிணறுகளில் நீர் ஊற்று குறைந்து பம்பிங் குறைந்தது.குடிநீர் சப்ளை மிகவும் தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் பெரிய அளவு நீர் வரத்து இல்லாவிட்டாலும், மணற்படுகை நிறையும் அளவுக்கு நீர் வரத்து இருந்தது.குடிநீர் திட்ட பம்பிங் கிணறுகள் உள்ள இடத்தில் குறைந்த பட்சம் 9 அடி முதல் 10 அடிவரை மணல் உள்ளது.

இதனால் பம்பிங் கிணறுகளில் நீர் ஊற்று கிடைத்துள்ளது. குடிநீர் திட்டங்களில் பம்பிங் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் வறட்சியின் எல்லைக்கு சென்ற குடிநீர்திட்டங்கள் புத்துயிர் பெற்றுள்ளதால் குடிநீர் சப்ளையில் சிறிது நாட்களுக்கு தட்டுப்பாடு இருக்காது.

Last Updated on Friday, 23 April 2010 06:56
 


Page 259 of 390