Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் வெற்றி : 3 மணி நேரம் வினியோகிக்க ஆய்வு

Print PDF

தினமலர்              22.08.2013

தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் வெற்றி : 3 மணி நேரம் வினியோகிக்க ஆய்வு

கோவை : கோவை மாநகராட்சியின் 30 வார்டுகளில் சிறுவாணி குடிநீர் தினமும் வினியோகம் செய்யும் திட்டம் வெற்றியடைந்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர்-1, பில்லூர்-2, வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி - குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகள் நிரம்பியுள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்கு தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்கிறது. இதனால், சிறுவாணி குடிநீர் சப்ளையாகும் பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த முறையை மாற்றி, சிறுவாணி வார்டுகளில் தினமும் குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. கடந்த 18ம் தேதி முதல், பரிச்சார்த்த முறையில், தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பொறியாளர்கள் கூறியதாவது:

சிறுவாணி, பில்லூர்-1, பில்லூர்-2, வடவள்ளி - கவுண்டம்பாளையம் குடிநீர் திட்டம், ஆழியாறு குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் 220 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. சிறுவாணி திட்டத்தில் 96 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைப்பதால், சிறுவாணி குடிநீர் வழங்கும் பகுதிகளில் தினமும் இரண்டு மணி நேரம் குடிநீர் வழங்கப்படுகிறது.

காந்திபார்க், பாரதி பார்க், டாடாபாத், சித்தாபுதூர், வ.உ.சி., பூங்கா, டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மேல்நிலைத்தொட்டிகளில் தினமும் 15 மில்லியன் லட்சம் லிட்டர் குடிநீர் தேக்கப்படுகிறது. ஆர்.எஸ்.புரம், ராம்நகர், சிவானந்தாகாலனி, டாடாபாத், காந்திபுரம், சித்தாபுதூர், காட்டூர், ரேஸ்கோர்ஸ், கோட்டைமேடு, பி.என்.புதூர், கடைவீதி பகுதிகளில் 30 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. பரிச்சார்த்த முறையில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் வெற்றியடைந்துள்ளது.

குடிசைப்பகுதிகளில், வீட்டு குடிநீர் இணைப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. பொதுக்குழாய் குடிநீரை மட்டும் மக்கள் நம்பியுள்ளனர். அதனால், குடிசைப்பகுதிகளுக்கு திருப்திகரமாக குடிநீர் கிடைக்கவில்லை. தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை முறைப்படுத்தி, மூன்று மணி நேரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வுப்பணிகள் நிறைவடைந்ததும், இத்திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

அறிவொளி நகருக்கு குடிநீர் விநியோகம்: எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Print PDF

தினமணி                20.08.2013

அறிவொளி நகருக்கு குடிநீர் விநியோகம்: எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

பெரியநாயக்கன்பாளையத்தையடுத்த எண்.4 வீரபாண்டி பேரூராட்சி, அறிவொளி நகருக்கு குடிநீர் விநியோகிப்பதற்கான தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

 கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவை, வடகோவைப் பகுதியில் ரயில்வே பாதையோரத்தில் குடியிருந்தவர்களை மாவட்ட நிர்வாகம் அங்கிருந்து அகற்றி எண்.4 வீரபாண்டி பேரூராட்சி பகுதி, அறிவொளி நகரில் குடியமர்த்தியது. 3 மற்றும் 4-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியான இங்கு முதலில் அவர்கள் தங்க மறுத்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தந்ததையடுத்து தற்போது அங்கேயே வசிக்கின்றனர். அதிக மக்கள் பெருக்கம் காரணமாக இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.8.40 லட்சம் செலவில் எம்.ஜி.ஆர்.நகரிலிருந்து ஆழ்குழாய்க் கிணற்று நீரை விநியோகிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து குடிநீர்க் குழாய் விஸ்தரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்பணி நிறைவடைந்ததையொட்டி குடிநீர் விநியோகம் செய்வதற்காக நடந்த தொடக்க விழாவிற்கு செயல் அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் கே.வி.என்.ஜெயராமன், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ் குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். விழாவில் கவுன்சிலர்கள் ஆனந்தன், சிக்கந்தர், பாலாமணி, சரோஜா, விஜயகுமார், குப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இளநிலை எழுத்தர் நம்மாழ்வார் நன்றி கூறினார்.

 

திருத்தங்கல் குடிநீர் இணைப்பில் கண்ட்ரோல் வால்வு அமைக்க முடிவு

Print PDF

தினமணி                20.08.2013

திருத்தங்கல் குடிநீர் இணைப்பில் கண்ட்ரோல் வால்வு அமைக்க முடிவு

திருத்தங்கல் நகராட்சியில் குடிநீர் இணைப்புகளில் புளோ கண்ட்ரோல் வால்வுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என நகர்மன்றத் தலைவர் க.தனலட்சுமி, துணைத்தலைவர் பொ.சக்திவேல் ஆகியோர் தெரிவித்தனர்.

 திருத்தங்கல் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 3400 குடிநீர் இணைப்புகள் உள்ளன. மானூர் குடிநீர் திட்டத்தின்கீழ் நகராட்சிக்கு தினசரி 25 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது தினசரி 12 லட்சம் முதல் 14 லட்சம்

லிட்டர் தண்ணீர்தான் வழங்கப்பட்டு வருகிறது. எனவே 7 நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் இணைப்பில் பலர் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பது தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி அலுவலர்கள்  திடீர் சோதனை நடத்தி, குடிநீர் இணைப்பில் பொருத்தி தண்ணீர் பிடித்ததாக 70 மோட்டார்களை பறிமுதல் செய்தனர். மேலும் சோதனை தொடந்து நடைபெறும். 

  மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதால், தெருக்களில் உள்ள பொதுக் குழாய்களில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது என புகார் வந்துள்ளது.

   எனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ள அனைவரும், குழாயை வீட்டிற்கு வெளியே வைக்கவேண்டும் எனவும், குழாயில் ப்ளோ கண்ட்ரோல் வால்வு பெருத்தவேண்டும் எனவும் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 21 வார்டில் தற்போது 120 குடிநீர் இணைப்புகளுக்கு ப்ளோ கண்ட்ரோல் வால்வு பொருத்தப்பட்டுவிட்டது. மற்ற வார்டுகளில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என அவர்கள் கூறினர்.

 


Page 28 of 390