Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

வைகை குடிநீர் குழாய் உடைப்பு பழுது நீக்கம் இன்று முதல் குடிநீர் விநியோகம் தொடரும்

Print PDF

தினமணி 06.04.2010

வைகை குடிநீர் குழாய் உடைப்பு பழுது நீக்கம் இன்று முதல் குடிநீர் விநியோகம் தொடரும்

மதுரை, ஏப். 5: மதுரை மாநகராட்சி முதலாவது வைகை குடிநீர்த் திட்டக் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை (ஏப்.6) முதல் குடிநீர் விநியோகம் சீராகத் தொடங்கும் என மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

சில நாள்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் முதலாவது குடிநீர்த் திட்டக் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். எனவே தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் மாநகராட்சியினர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது மாநகராட்சிப் பணியாளர்கள் குழாயில் ஏற்பட்ட உடைப்பைச் சரி செய்தனர். எனவே, செவ்வாய்க்கிழமை முதல் நகரில் குடிநீர் விநியோகம் தடையின்றித் தொடரும்.

கோடை காலம் என்பதால் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கமிஷனர் கேட்டுக்கொண்டார்.

Last Updated on Tuesday, 06 April 2010 10:00
 

குடிநீர்ப் பிரச்னையை எதிர்நோக்கும் நாகர்கோவில், கன்னியாகுமரி

Print PDF

தினமணி 06.04.2010

குடிநீர்ப் பிரச்னையை எதிர்நோக்கும் நாகர்கோவில், கன்னியாகுமரி

நாகர்கோவில், ஏப். 5: நாகர்கோவில் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான முக்கடல் அணையின் நீர்மட்டம் 2.25 அடியாகியுள்ளது. இதனால் எழும் குடிநீர்ப் பிரச்னையை சமாளிக்க பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாசன அணைகளில் நீர்மட்டம் பாதியளவே இருக்கும் நிலையில் அவற்றிலிருந்து குடிநீருக்கும் தண்ணீர் எடுப்பதால் ஜூன் மாதத்தில் கன்னிப்பூ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

நாகர்கோவில் நகராட்சிக்கென்று குடிநீர்த் திட்டமாக தற்போது பயன்பாட்டிலுள்ள முக்கடல் குடிநீர்த் திட்டம் 64 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சியில் 25 ஆயிரம் மக்கள்தொகையுள்ள காலத்தில் கொண்டுவரப்பட்டது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தினரால் சர்.சி.பி. ராமசுவாமி ஐயர் திவானாக இருந்த காலத்தில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த 64 ஆண்டுகளில் நகரில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கும், சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கும், சுசீந்திரத்துக்கும் தற்போது இத் திட்டத்தின் மூலமே குடிநீர் வழங்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி நாகர்கோவிலில் சுமார் 3.75 லட்சம் பேருக்கு குடிநீர் விநியோகிக்க வேண்டியுள்ளது. பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்பவும், விரிவடைந்துவரும் நகர எல்கைக்கு ஏற்பவும், விரிவாக்கம் செய்து செயல்படுத்தப்படும் சுசீந்திரம், கன்னியாகுமரிக்கான குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டும் குடிநீர் ஆதாரங்களைப் பெருக்க கடந்த பல ஆண்டுகளாகவே நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

25 ஆண்டுகளாக நாகர்கோவில் நகரில் கோடைக் காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவிவருகிறது. கோடையில் ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கும் நிலைமை ஏற்படுகிறது. அக் காலங்களில் மிகுந்த பொருள் செலவில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் நிலையும் உருவாகிறது.

இவ்வாண்டும் கோடையில் குடிநீர்ப் பிரச்னையை நாகர்கோவில் நகரம் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போது 6 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 2.25 அடியாக குறைந்துள்ள நிலையில் மே மாதம் இறுதிவரை குடிநீர் விநியோகம் இம் முறைப்படி இருக்காது என்றே தெரிகிறது.

முக்கடல் அணையின் உச்ச நீர்மட்டம் 25 அடியாகும். பருவமழைக் காலங்களில் இந்த அணை நிரம்பி வழியும், ஆனால் கோடை வந்ததும் அணையில் தண்ணீர் இருப்பு அடிமட்டத்துக்கு சென்றுவிடுகிறது. இங்கிருந்து குடிநீருக்காக தினமும் தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு வருவதால் 4 நாள்களுக்கு அணையின் நீர்மட்டம் ஓர் அடி குறைந்துவிடுகிறது.

அவ் வகையில் கணக்கில் இன்னும் இரு வாரத்தில் அணையில் தண்ணீர் இருப்பு மைனஸ் நிலைக்கு சென்றுவிடும். இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். ஆனால் குடிநீர்ப் பிரச்னையைச் சமாளிக்கும் வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து கடந்த மாதம் 21-ம் தேதி முதல் தண்ணீர் எடுக்கப்படுவதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம் 9-ம் தேதி பாசனத்துக்காக இந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு ஆண்டுதோறும் கோடையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி நீர்ப்பாசன அணைகளிலுள்ள தண்ணீரை நகராட்சி குடிநீருக்காக பெருவாரியாக எடுத்து பயன்படுத்துவதால் பாசனத்துக்கு போதிய நீரை கடைவரம்பு நிலங்களுக்கு வழங்க முடியாமல் போகிறது என்பது விவசாயிகள் தரப்பு வாதம்.

கடைவரம்பு நிலங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகுவதும் இம் மாவட்டத்தில் வாடிக்கையாகிவிட்டதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில்தான், விவசாயிகள் நலன் கருதியும், நாகர்கோவில், கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கவும், கூடுதல் குடிநீர் நீர் ஆதாரத்தை உருவாக்கவும் வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. இதற்காக உலக்கை அருவி குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாக வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் அத் திட்டத்துக்கு பிள்ளையார்சுழிகூட போடப்படவில்லை. இதுகுறித்த ஆய்வுக்காக ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாகம் அளித்தும் அதனால் எவ்வித பயனும் ஏற்படவில்லை. அத் திட்டம் வருமா, வராதா என்பதைக்கூட நகராட்சி நிர்வாகத்தால் தெரிவிக்க முடியவில்லை.

உலக்கையருவி திட்டத்துக்கு உயிர் உள்ளது

உலக்கையருவி திட்டம் குறித்து நாகர்கோவில் நகர்மன்றத் தலைவர் அசோகன் சாலமனிடம் கேட்டபோது, அத் திட்டத்துக்கு உயிர் இருக்கிறது என்றும் அத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

கோடையில் நாகர்கோவிலில் குடிநீர்த் தட்டுப்பாடு நிச்சயம் இருக்காது. முக்கடல் அணையின் நீர்மட்டம் குறைந்தாலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் பெறப்படுகிறது. அவ்வாறு தண்ணீர் பெறுவதற்கு நகர்மன்றத் தலைவராக நான் பொறுப்பேற்றபோது அரசாணை பெறப்பட்டது. அதன்படி தண்ணீர் எடுக்கப்படுகிறது. நகரில் குடிநீரை வேறுபயன்பாட்டுக்கு பயன்படுத்துவதைத் தடுத்துள்ளோம் என அவர் மேலும் கூறினார்.

Last Updated on Tuesday, 06 April 2010 09:23
 

சீரானது குடிநீர் வினியோகம்

Print PDF

தினமலர் 06.04.2010

சீரானது குடிநீர் வினியோகம்

மதுரை : மதுரை கோச்சடை பகுதியில் வைகை முதலாவது குடிநீர் திட்டக்குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்பட்டதால், இன்று முதல் குடிநீர் சீராக வினியோகிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்துள் ளார். குழாய் உடைப்பால் கடந்த 1ம் தேதியிலிருந்து குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.

Last Updated on Tuesday, 06 April 2010 06:21
 


Page 277 of 390