Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

மாநகராட்சியில் 30 வார்டுகளில் தினமும் குடிநீர் :இன்று முதல் அமலுக்கு வருகிறது

Print PDF

தினமலர்                19.08.2013

மாநகராட்சியில் 30 வார்டுகளில் தினமும் குடிநீர் :இன்று முதல் அமலுக்கு வருகிறது


கோவை:கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி குடிநீர் தேவைக்கேற்ப கிடைப்பதால், 30 வார்டுகளில் தினமும் இரண்டு மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் இன்று முதல் துவங்குகிறது.கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர்-1, பில்லூர்-2, வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி - குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், சிறுவாணி திட்டத்தில் தினமும் 85 மில்லியன் லிட்டர் தண்ணீர் எதிர்பார்க்கப்படுகிறது. வறட்சி காரணமாக சிறுவாணி திட்டத்தில் தினமும் 25 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைத்தது.இதனால், சிறுவாணி குடிநீர் குழாயுடன், பில்லூர் குடிநீர் திட்டத்தை இணைத்து, சிறுவாணிக்கு பதிலாக பில்லூர் குடிநீர் வழங்கப்பட்டது. மக்களின் தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்கவில்லை.

பழைய மாநகராட்சி பகுதியில் வாரம் ஒருமுறை, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் மாதம் இருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சிறுவாணி அணை நிரம்பியுள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்கு தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்கிறது. இதனால், சிறுவாணி சப்ளை உள்ள வார்டுகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் நான்கு மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்த முறையை மாற்றி, சிறுவாணி வார்டுகளில் தினமும் குடிநீர் வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பழைய மாநகராட்சி பகுதியில் 30 வார்டுகளில் இன்று முதல், தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் துவங்கப்படுகிறது.

இதற்கான பணிகளில் மாநகராட்சி பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொறியாளர்கள் கூறுகையில், "மாநகராட்சியில் தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இன்றைய (நேற்று) நிலவரப்படி சிறுவாணி திட்டத்தில் 96.25 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. பில்லூர்-1 திட்டத்தில் 64.83 மில்லியன் லிட்டர் தண்ணீரும், பில்லூர்-2 திட்டத்தில் 37.39 மில்லியன் லிட்டர் தண்ணீரும், வடவள்ளி - கவுண்டம்பாளையம் திட்டத்தில் தினமும் 11.21 மில்லியன் லிட்டரும், ஆழியாறு திட்டத்தில் 7.64 மில்லியன் லிட்டரும் தண்ணீர் கிடைத்தது.சிறுவாணி திட்டத்தில் தேவைக்கேற்ப குடிநீர் கிடைப்பதால், தினமும் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.

காந்திபார்க் மேல்நிலைத்தொட்டியில் 2 லட்சம் லிட்டர், பாரதிபார்க் தொட்டியில் 3 லட்சம் லிட்டர், டாடாபாத் தொட்டியில் 2 லட்சம் லிட்டர், சித்தாபுதூர் தொட்டியில் 2.5 லட்சம் லிட்டர், வ.உ.சி., பூங்கா தொட்டியில் 2 லட்சம் லிட்டர், டவுன்ஹால் தொட்டியில் 1.5 லட்சம் லிட்டர், ஆர்.எஸ்.புரம் தொட்டியில் 2 லட்சம் லிட்டர் சிறுவாணி குடிநீர் தேக்கப்படுகிறது. இதனால், ஆர்.எஸ்.புரம், ராம்நகர், சிவானந்தாகாலனி, டாடாபாத், காந்திபுரம், சித்தாபுதூர், காட்டூர், ரேஸ் கோர்ஸ், கோட்டைமேடு, பி.என்.புதூர், கடைவீதி பகுதிகளில் 30 வார்டுகளுக்கு தினமும் 2 மணி நேரம் குடிநீர் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் நாளை (இன்று) முதல் செயல்படுத்தப்படவுள்ளது' என்றனர். மாநகராட்சி துணை கமிஷனர் சிவராசு கூறுகையில், ""முதலில் 30 வார்டுகளில் தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் துவங்கப்படுகிறது. இரண்டு மணி நேரம் குடிநீர் வழங்கும் போது, பொதுக்குடிநீர் குழாய்கள் மட்டுமே உள்ள குடிசைப்பகுதிகளுக்கு தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்காவிட்டால், கூடுதலாக 30 நிமிடம் குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.

 

வீராணம் நீர் சென்னை வந்தது: அமைச்சர் திறந்து வைத்தார்

Print PDF

தினபூமி             19.08.2013

வீராணம் நீர் சென்னை வந்தது: அமைச்சர் திறந்து வைத்தார்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Veeranam(C).jpg 

சென்னை, ஆக.19 - முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி வீராணத்தில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமைமுதல் (ஆகஸ்ட் 17) தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமைமுதல் (ஆகஸ்ட் 18) சென்னையில் வீராணம் நீர் விநியோகிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் நகரில் குடிநீர் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் குடிநீர் தேவைக்காக நாளொன்றுக்கு 18 கோடி லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான புதிய வீராணம் திட்டம் 2004-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதற்காக வீராணம் ஏரியில் இருந்து சென்னை வரை சுமார் 230 கிலோ மீட்டருக்கு குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் வீராணம் ஏரி வறண்டது. 

இதனால் சென்னைக்கு வரும் வீராணம் நீர் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் பெய்த கன மழை காரணமாக அங்கிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பியது.

நீர் திறப்பு: மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து, அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையின் உபரி நீர் கடந்த 7-ம் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வரத் தொடங்கியது. தற்போது வீராணம் ஏரியின் நீர் இருப்பு மொத்தக் கொள்ளளவில் 65 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து முதல்வரின் உத்தரவின்பேரில் சென்னையின் குடிநீர் தேவைக்காக சனிக்கிழமை வீராணம் நீர் திறந்துவிடப்பட்டது. சிதம்பரம் அருகில் உள்ள வடக்குத்து சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி காலை 11 மணிக்கு வீராணம் நீரை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சென்னைக் குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன், கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை வந்தது: வீராணத்திலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் சென்னை போரூர் நீர்உந்து நிலையத்துக்கு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வந்தடைந்தது. அதன் பிறகு நகரின் மற்ற நீர் உந்து நிலையங்களுக்கு நீர் திருப்பி விடப்பட்டது.

நேற்று முதல் மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளுக்கு வீராணம் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளதாக குடிநீர் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

பற்றாக்குறை குறையும்: சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு நாளொன்றுக்கு, 83-ல் இருந்து 87 கோடி லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். பற்றாக்குறை காரணமாக கடந்த சில மாதங்களாக 55 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வந்தது.

வீராணம் நீர் வரத் தொடங்கியுள்ளதால் நகரில் குடிநீர் விநியோகம் 18 கோடி லிட்டர் அதிகரிக்கும் எனவும் இதனால் நகரில் குடிநீர் பற்றாக்குறை குறையும் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

சென்னைக்கு தினமும் வீராணம் குடிநீர்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

Print PDF

தினமணி                17.08.2013

சென்னைக்கு தினமும் வீராணம் குடிநீர்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சென்னை நகருக்கு தினமும் வீராணம் குடிநீர் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

வீராணம் ஏரியில் இருந்து சனிக்கிழமை முதல் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்து விடப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கு வகை செய்ய புதிய வீராணம் திட்டம் எனது தலைமையிலான அரசால் கடந்த 2004-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது அந்தத் தண்ணீர் வீராணம் ஏரியில் பெறப்பட்டு அந்தப் பகுதியின் பாசனத்துக்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 2-ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டிருந்தேன். இப்போது மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக வீராணம் ஏரியில் 935.20 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. எனவே, வீராணம் ஏரியில் இருந்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) முதல் சென்னை மாநகர குடிநீருக்காக நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் (1.8 கோடி லிட்டர்) தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

தேவை எவ்வளவு? சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 84 முதல் 87 கோடி லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இப்போது சுமார் 55 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் போது தண்ணீர் பற்றாக்குறையின் அளவு வெகுவாகக் குறையும் என்று சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 29 of 390