Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நிலத்தடி நீரை செறிவூட்டும் பெருந்திட்டம் பொதுமக்கள் ஒத்துழைக்க கலெக்டர் அழைப்பு

Print PDF

தினமலர் 08.01.2010

நிலத்தடி நீரை செறிவூட்டும் பெருந்திட்டம் பொதுமக்கள் ஒத்துழைக்க கலெக்டர் அழைப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நிலத்தடி நீரை செறிவூட்டும் பெருந்திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது: மிக வேகமாகவும், கட்டுப்பாடற்ற முறையிலும் நிலத்தடி நீர் உபயோகப்படுத்தப்பட்டு வருவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. கிடைக்கும் நீரின் தரமும் திருப்தியாக இல்லை. கடலோர பகுதிகளில் நிலத்தடி நீரை அதிக அளவில் உபயோகிப்பதன் மூலம் கடல் நீர் உட்புகுதல் ஏற்படுகிறது. இதை சரி செய்யும் பொருட்டு மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள நீரை நிலத்தடிக்கு கொண்டு செல்வது அவசியமாகும்.

பல ஆண்டாக வாய்கால்களில் இருந்து குளங்களுக்கு நீரை எடுத்துச் சென்று சேமிப்பதன் மூலமாக கிராமப்பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தமிழக அரசு செயற்கை முறையில் நிலத்தடி நீரை செறிவூட்டம் செய்ய நீர்வள ஆதாரத்துறை, நிலத்தடி நீர்த்துறை, வேளாண் பொறியியல் துறை, வனத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்த பெரும் திட்டம் வகுத்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நீர்வள ஆதார துறை மூலம் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஆழ்குழாய் கிணறுகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழைநீர், வெள்ளநீர் கூழாங்கற்கள் மற்றும் மணலால் சுத்தம் செய்யப்பட்டு குழாய் மூலம் நிலத்தடிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வகையில் தலா இரண்டு லட்சம் செலவில் 50 ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகள், செறிவூட்டும் நிலையங்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் உபயோகத்தில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் நிலையங்கள் தலா 60 ஆயிரம் ரூபாய் செலவில் நான்கு நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாய பொறியியல் துறையின் சார்பில் தலா 30 ஆயிரம் செலவில் 70 ஆழ்குழாய் கிணறு நிலத்தடி நீர் செறிவூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மழைநீரை சேகரிக்க இத்துறை மூலம் 50 ஆயிரம் ரூபாய் செலவில் 104 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பண்ணைக்குட்டைகள் அமைக்க பத்து சதவீதம் மட்டுமே நில உரிமையாளர்களுக்கு செலவாகும். 90 சதவீத செலவை அரசு ஏற்று பணணைக்குட்டைகள் அமைத்து தரப்படும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 95 சதவீதம் அரசு மானியம் வழங்கும். கிராமப்புறங்களில் உள்ள புறம்போக்கு நிலங்களில் தலா 1.50 லட்சம் செலவில் பத்து கிராம குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.


எனவே, பொதுமக்கள் வருங்கால சந்ததியினருக்கு நல்ல நீரை வழங்க நீரை அசுத்தம் செய்யாமலும், தங்களுக்கு தேவையான அளவுக்கு மட்டும் நீரை உபயோகித்தும், மழை நீரை சேகரிக்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். மாவட்ட வன அலுவலர் துரைச்சாமி, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கலியபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 08 January 2010 07:58
 

அந்தியூர் தொகுதியில் கோடையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிற்றூராட்சித் தலைவர்களுக்கு அழைப்பு

Print PDF

தினமணி 06.01.2010

அந்தியூர் தொகுதியில் கோடையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிற்றூராட்சித் தலைவர்களுக்கு அழைப்பு

பவானி, ஜன.5: அந்தியூர் தொகுதிக்குள்பட்ட அனைத்து சிற்றூராட்சிப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் தேவையான பணிகள் குறித்து பட்டியல் தயாரித்து வழங்குமாறு அந்தியூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.குருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி : தற்போதைய சூழலில் பருவமழை பொய்த்து விட்ட காரணத்தால் வரும் கோடைகாலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, அந்தியூர் தொகுதிக்குள்பட்ட 25 சிற்றூராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிப் பகுதிகளிலும் குடிநீர் தேவையை மேம்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, அனைத்து சிற்றூராட்சிகளின் தலைவர்களும் தங்களது பகுதியில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்குழாய்களுடன் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல், ஆற்றுநீர் வழங்கப்படாத பகுதிகளில் குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.

வரும் கோடை காலத்தில் ஏற்பட்டும் இந்நிலையைப் போக்க தங்களின் தேவை குறித்த பட்டியல் தயாரித்து வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Last Updated on Wednesday, 06 January 2010 10:07
 

புதிய குடிநீர்த் திட்டப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் நிறைவு

Print PDF

தினமணி 06.01.2010

புதிய குடிநீர்த் திட்டப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் நிறைவு

நாமக்கல், ஜன. 5: நாமக்கல் நகராட்சிப் பகுதி மக்களுக்கான ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய குடிநீர்த் திட்டப் பணிகள், மார்ச் இறுதிக்குள் நிறைவு பெறும் என மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் செ. காந்திச் செல்வன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் நகராட்சி மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

நாமக்கல் நகராட்சி 3-வது குடிநீர்த் திட்டப் பணிகளுக்காக நகரில் 6 இடங்களில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மார்ச் மாதத்துக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ஏப்ரல் முதல் புதிய குடிநீர்த் திட்டத்தில் மக்கள் பயன்பெறலாம்.

இத் திட்டம் அமலுக்கு வந்தால் நகராட்சிப் பகுதி மக்களின் தண்ணீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும். நகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 80 சதம் முடிவடைந்துள்ளன. இத் திட்டத்துக்காக சேந்தமங்கலம் சாலையில் உள்ள நகராட்சி மயானப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

ரூ. 3.71 கோடி மதிப்பில் மக்காத குப்பையை அறிவியல் ரீதியாக அழிக்கும் வகையில் லத்துவாடியில் கிடங்கு அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகளும் 6 மாத காலத்தில் முடிவடையும் என்றார் அவர். முன்னதாக, நகராட்சி அலுவலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், சேந்தமங்கலம் சாலையில் உள்ள நவீன எரிவாயு தகனமேட்டை, கொசவம்பட்டி, லத்துவாடி பகுதிகளில் அமைக்கப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்குகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

Last Updated on Wednesday, 06 January 2010 10:06
 


Page 315 of 390