Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கட்டமைப்பு சோதனை இயக்கம்

Print PDF

தினமலர் 03.06.2010

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கட்டமைப்பு சோதனை இயக்கம்

சென்னை : கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின், கட்டமைப்பு சோதனை இயக்கத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:சென்னை நகரின், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில் துவக்கப்பட்டது. இதற்கு, கடந்த 2007ம் ஆண்டு, பிப்ரவரி 25ம் தேதி, ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நிலையத்தின் அனைத்து பணிகளும், தற்போது முடிந்துள்ளன.இதையடுத்து, செயல்திறன் சோதனைக்கான, சான்றிதழ் வழங்கியபின், இந்நிலையத்திலிருந்து, குடிநீர் கொண்டு வரப்படும். இப்பணிகள், இம்மாத இறுதிக்குள் முடிவடையும்.காட்டுப்பள்ளியிலிருந்து, சென்னை நகருக்கு, குடிநீரை கொண்டு செல்ல, தேவைப்படும் கட்டமைப்பு பணிகளை அமைக்க, 93 கோடி ரூபாயில், மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு நிதி உதவியின் கீழ், 87 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒப்புதல் பெறப்பட்டது.அதன்படி, காட்டுப்பள்ளியில், 2.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட, கீழ்நிலைத் தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையம், மணலியில் 2.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலைத் தொட்டி, மாதவரத்தில் 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலைத் தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையம், செங் குன்றத்தில் 6 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலைத் தொட்டி ஆகிய உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், 38 கிலோ மீட்டர் நீளத்திற்கு, குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டு, சென்னை நகரில், குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இக்கட்டமைப்புகளின் சோதனை இயக்கத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காட்டுப்பள்ளியில், துவக்கி வைத்தார்.