Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஜூலை முதல் சென்னைக்கு கடல் குடிநீர் விநியோகம்: சோதனை இயக்கத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

Print PDF

தினமணி 03.06.2010

ஜூலை முதல் சென்னைக்கு கடல் குடிநீர் விநியோகம்: சோதனை இயக்கத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

 

மீஞ்சூர்-காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து குடிநீரை சென்னைக்கு கொண்டு செல்லும் கட்டமைப்பின் சோதனை ஓட்டத்தை புதன்கிழமை தொடங்கியது 

பொன்னேரி, ஜூன் 2: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் நடைபெற்று வரும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து

ஜூலை முதல் சென்னைக்கு கடல் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

பொன்னேரி தாலுகாவில் மீஞ்சூர் அருகே கடலோரம் அமைந்துள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் ரூ.2,300 கோடி செலவில் நடைபெற்று வரும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து குடிநீரை சென்னை நகருக்கு கொண்டு செல்லும் கட்டமைப்பின் சோதனை இயக்கத்தை புதன்கிழமை துணை முதல்வர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை 25.01.07-ன் போது அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு..ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 23.9.08-ல் இங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட அவர் இத்திட்டப் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டது என்றும், வரும் 2009-ம் ஆண்டு பொங்கல் முதல் கடல் நீர் குடிநீராக மாற்றப்பட்டு சென்னைக்கு விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார். அதன் பிறகும் இப்பணிகள் முழமையாக முடிவடையாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையின் பணிகளும் முழுவதுமாக முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. இதையடுத்து காட்டுப்பள்ளி கிராமத்தில் இருந்து கடல் நீரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் மணலி, மாதவரம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள கீழ் நிலைத் தொட்டிகளுக்கு கொண்டு செல்லும் கட்டமைப்பின் சோதனை இயக்கத்தை துணை முதல்வர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், "இந்த ஆலையில் இருந்து பெறப்படும் குடிநீர் சென்னைக்கு கொண்டு செல்வதற்கான சோதனை இயக்கத்தை புதன்கிழமை தொடங்கி வைத்துள்ளேன். 15 அல்லது 20 நாள்கள் சோதனைக்கு பிறகு சென்னைக்கு குடிநீர் விநியோகத்தை முதல்வர் கருணாநிதி ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வைக்க உள்ளார்' என்றார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலர் டாக்டர் நிரஞ்சன்மார்டி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் சிவ்தாஸ் மீனா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ், பொன்னேரி கோட்டாட்சியர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.