Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.1,358 கோடி மதிப்பிலான யமுனை சுத்திகரிப்பு திட்டம் மாநில அமைச்சரவை அனுமதி

Print PDF

தினகரன் 22.07.2010

ரூ.1,358 கோடி மதிப்பிலான யமுனை சுத்திகரிப்பு திட்டம் மாநில அமைச்சரவை அனுமதி

புதுடெல்லி, ஜூலை 22: யமுனை ஆற்றை சுத்திகரிக்கும் திட்டத்துக்கு மாநில அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது. இத்திட்டத்தின்படி ரூ.1,358 கோடியில் மூன்று இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

யமுனை ஆற்றில் கழிவுநீர் சென்று சேர்வதால் அது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. யமுனையை சுத்தப்படுத்த வேண்டும் என்றால், அதில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்தால் மட்டுமே முடியும் என்ற நிலை இருந்தது. இதற்கு பல கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புத்தாக்க திட்டத்தின் கீழ் இதை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதேபோல் சுற்றுச்சூழல் துறை உட்பட இதற்கு தேவையான பிற துறைகளின் அனுமதியும் கிடைத்தது. இறுதியாக இத்திட்டத்துக்கு மாநில அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அதைதொடர்ந்து திட்டத்துக்கு அனுமதி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், "இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. யமுனையை சுத்தப்படுத்துவது முடியாத காரியமாக நினைக்கப்பட்ட நேரம் மாறி, அது விரைவில் சுத்தமாகும் காலம் வந்துவிட்டது" என்றார்.

யமுனையை சுத்தப்படுத்தும் திட்டத்தின் கீழ் நஜாப்கர், சப்ளிமென்டரி, சதாரா ஆகிய மூன்று முக்கிய கழிவுநீர் வாய்க்காலில் இருந்து யமுனைக்கு சென்று சேரும் கழிவுநீர், சுத்திகரிப்பு நிலையத்துக்கு திருப்பிவிடப்படும். அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் தண்ணீர் மாற்றப்பட்ட பின் அது யமுனையில் திருப்பிவிடப்படும். இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் நாளொன்றுக்கு 132 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்தம் செய்யப்படும்.

யமுனை சுத்திகரிப்பு திட்டம் மொத்தம் ரூ.1,358 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் ரூ.475 கோடியை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வழங்கும். மீதமுள்ளவற்றை மாநில அரசு வழங்கும்.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புத்தாக்க திட்டத்தின் கீழ் டெல்லியில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய திட்டமாக இது இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.