Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கருணாநிதி, 31-ந் தேதி தொடங்கி வைக்கிறார்; சென்னை குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

Print PDF

மாலை மலர் 28.07.2010

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கருணாநிதி, 31-ந் தேதி தொடங்கி வைக்கிறார்; சென்னை குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

மீஞ்சூர், ஜூலை. 28- மீஞ்சூரில் இருந்து சென்னைக்கு குடிநீர் "சப்ளை" செய்யும் கடல் நீரை குடி நீர் ஆக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி 31-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

சென்னை நகரின் குடி நீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை செயல் படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக தனியார் நிறுவனத்தின் உதவியுடன் சென்னையை அடுத்த மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.400 கோடி செலவில் ஐ.வி.சி.ஆர்.எஸ். நிறுவனமும் ஜெர்மன் நாட்டு பெப்சோ நிறுவனமும் இணைந்து இந்த ஆலையை அமைத்துள்ளன.

கடல் நீரில் இருந்து தினமும் 100 மில்லியன் குடிநீரை தயாரித்து சென்னைக்கு "சப்ளை" செய்யும். இதன் கட்டுமான பணிகள் 2007-ம் ஆண்டு தொடங்கியது. துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் இதை தொடங்கி வைத்தார்.

இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்து குடிநீர் உற்பத்தி தொடங்கி விட்டது. இதற்கான சோதனை ஓட்டத்தை துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு செய்தார்.

மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் இருந்து சென்னைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு வருவதற்காக சென்னை குடிநீர் வாரியம் மூலம் 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட குழாய் அமைக்கப்பட்டுள்ளது. குழாய் மூலம் குடிநீர் "சப்ளை" செய்வதற்காக செங்குன்றம், மாதவரம், ஆகிய இடங்களில் பிர மாண்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடல் நீரை குடிநீர் ஆகும் நிலைய பணிகள், குடி நீர் வினியோகம் செய்வதற்கான குழாய் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. இதையடுத்து வருகிற 31-ந் தேதி (சனிக்கிழமை) முதல் மீஞ்சூரில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீர் ஆக்கும் நிலையம் இயங்குகிறது.

இந்த திட்டத்தை 31-ந் தேதி மாலை 5 மணிக்கு, மீஞ்சூர் காட்டுப்பள்ளில் முதல்-அமைச்சர்கருணாநிதி தொடங்கி வைக்கிறார். விழாவுக்கு, துணை முதல்-அமைச்சர் மு.. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

அமைச்சர் கே.பி.பி.சாமி, சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., வேணுகோபால் எம்.பி., பலராமன் எம்.எல்.. உள் படபலர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

அரசு தலைமை செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகிக்கிறார். குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சிவ்தாஸ் மீனா திட்டத்தை விளக்கி கூறுகிறார். நகராட்சி மற்றும் குடிநீர் வாரிய முதன்மை செயலாளர் வரவேற்கிறார். சென்னை வாட்டர் சால்யூஷன் நிறுவன இயக்குனர் ராமச்சந்திரன் நன்றி கூறுகிறார்.

சென்னை தற்போது பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கிருஷ்ணா தண்ணீரும் வருகிறது.

இப்போது கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் நிறைவேறி உள்ளது. 31-ந் தேதி முதல் மீஞ்சூரில் இருந்து தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு வரும். எனவே, இனி சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இந்த திட்டம் மூலம் சென்னை குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.