Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூனில் நிறைவடையும்: மு.க.ஸ்டாலின்

Print PDF

தினமணி 24.04.2010

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூனில் நிறைவடையும்: மு..ஸ்டாலின்

சென்னை, ஏப்.23: கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூன் மாதத்துக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று சட்டப் பேரவையில் துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவாதத்தில் அதிமுக எம்.எல்.., கே.பி. அன்பழகன் பேசியது:

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் படி 2009-ம் ஆண்டில் சென்னைக்கு தினசரி 100 மில்லியன் லிட்டர் குடிநீர் வர இருக்கிறது என்று பேரவையில் அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று நிலைமை என்ன?

அப்போது, ஸ்டாலின் குறுக்கிட்டுப் பேசியது:

மீஞ்சூர் அருகே காட்டுப்பாக்கம் கிராமத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அதிமுக ஆட்சியிலேதான் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில வழக்குகளின் காரணமாக அந்தப் பணி அன்றைக்குத் தடைப்பட்டு, தொடங்க முடியாத நிலையிலே இருந்து வந்தது.

இதை அதிமுக தொடங்கிய திட்டம் கிடப்பிலே போட்டுவிடவில்லை. சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னையைப் தீர்க்கக் கூடிய வகையிலே இந்தத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி எங்களுக்கு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையிலே நான் சொன்னது உண்மைதான். ஆனால், அந்தப் பகுதியில் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படுவதால், தொழில்நுட்ப ரீதியாக அந்தப் பணியை நிறைவேற்றுவதில் தடங்கல் ஏற்பட்டது.

இந்தத் திட்டத்தில், சென்னைக் குடிநீர் வாரியத்தைப் பொருத்தவரையில், அனைத்துப் பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக அரசுக்கும், வாரியத்துக்கும் எந்தவித இழப்பும் இல்லை.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பலமுறை நேரடியாகச் சென்று ஆய்வுப்பணியை மேற்கொண்டுள்ளோம்.

வரும் ஜூன் மாதம் இறுதியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். அதன்மூலம் சென்னை மாநகர மக்களுக்கு தினசரி 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Last Updated on Saturday, 24 April 2010 08:56