Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

153 பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி

Print PDF

தினமலர் 05.05.2010

153 பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் 153 கிராமப்புற அரசு பள்ளிகளில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.30 லட்சம் செலவில் 'குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்' அமைக்கப்பட உள்ளது.இளைய தலைமுறையினருக்கு நல்ல குடிநீர் வழங்குவதற்காக பள்ளிகள் தோறும் 'குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்' அமைக்கும் பணியை தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் மத்திய அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வகையான அரசு பள்ளிகளிலும் தூய குடிநீர் வழங்கும் வகையில் ரூ.20 ஆயிரம் செலவில் 'குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்' தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 14 யூனியன்களிலும் கடந்த 2 ஆண்டுகளாக கிராமப்புற பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருச்சி மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய அரசின் தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுத்தமான, சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வகையில் 'குட

நீர் சுத்திகரிப்பு கருவி' அமைக்கும் பணி நடந்து வருகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கிராமப்புறங்களில் உள்ள 78 பள்ளிகளில் தலா ரூ.20 ஆயிரம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. 2009-10ம் நிதியாண்டிலும் 78 கிராமப்புற பள்ளிகளில் தலா ரூ.20 ஆயிரம் செலவில் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செயப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை சுமார் 50 பள்ளிகளில் இந்த சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 28 பள்ளிகளிலும் வரும் ஜூன் 15ம் தேதிக்குள் அமைக்கப்படும். அடுத்தக்கட்டமாக 153 பள்ளிகளில் ரூ.30 லட்சத்து 60 ஆயிரம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை அமைப்பதற்கான ஆணைகள் பிறப்பித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு அடுத்த வாரத்திற்குள் டெண்டர் விட்டு இறுதி செய்யப்படும். அதன்பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட 153 பள்ளிகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்படும். இப்பணிகளை மேற்கொள்ள இந்தாண்டு அக்டோபர் மாதம் வரை காலக்கெடு உள்ளது. எனினும் ஆகஸ்ட் மாதத்திற்குள்ளே 153 பள்ளிகளிலும் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இதேபோல வரும் 2 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தின் 14 யூனியன்களிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் மைக்கப்பட்டு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தூய குடிநீர் வழங்கப்படும் என்றார்.குடிநீர் வடிகால் வாரிய தொழில்நுட்ப பணியாளர்கள் கூறுகையில், தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் மாணவர்களை பாதிக்காத வகையில் குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்படும் சுத்திகரிப்பு இயந்திரம் புற ஊதாக் கதிர்வீச்சின் மூலம் செயல்படுவதாகும். பள்ளியின் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து வரும் குழாயில் இந்த சுத்திகரிப்பு இயந்திரம் இணைக்கப்படும். இதன்மூலம் குடிநீர் தொட்டியில் இருந்து வரும் தண்ணீர் இந்த கருவிக்குள் சென்று சுத்திகரிக்கப்பட்டு அதன்பிறகு குடிநீர் குழாய்கள் மூலம் இந்த கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டிக்குச் செல்லும். அதிலிருந்து பிடித்து மாணவ, மாணவிகள் குடிநீரை பருகலாம். இந்த திட்டத்திற்காக ரூ.20 ஆயிரம் மதிப்பில் புற ஊதாக்கதிர்கள் மூலம் செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், சின்டெக்ஸ் டேங்க், அதை வைப்பதற்கான ஸ்டாண்ட், வீணாகும் தண்ணீரை பிடிக்க வாளி, குழந்தைகள் தண்ணீர் குடிக்க டம்ளர்கள் என்று அனைத்து பொருட்களும் அடங்கிய ஒரு செட் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தூய குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது என்றனர்.

பராமரிப்பு அவசியம்
அரசின் முயற்சியால் பள்ளிகளில் இந்த கருவிகள் அமைக்கப்பட்டாலும் தொடர்ந்து அவை மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் அவற்றை பராமரிப்பது மிக மிக அவசியமாகும். எனவே, அதற்கான பொறுப்பை பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் மாணவ, மாணவிகள் தாங்களே முன் வந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இது குடிநீர் வடிகால் வாரியத்தினரின் கருத்து.

Last Updated on Wednesday, 05 May 2010 06:12