Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37 கோடி வழங்க இலக்கு

Print PDF
தினமணி 30.07.2009

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37 கோடி வழங்க இலக்கு

கரூர், ஜூலை 29: கரூர் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் (பொறுப்பு) சி. முனிரத்தினம் கூறினார்.

மகளிர் திட்டச் செயல்பாடுகள் குறித்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் ஆட்சியர் (பொறுப்பு) சி. முனிரத்தினம் தலைமையில் நடைப்பெற்றது.

கூட்டத்தில், ஆட்சியர் பேசியது:

2008-09ம் ஆண்டில் 3 ஆயிரம் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கிட நிர்ணயம் செய்ததில் 2,803 குழுக்களுக்கு மானியம் மற்றும் வங்கிக் கடனுதவியாக ரூ. 16.82 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 197 சுய உதவிக் குழுக்களுக்கும் தலா ரூ. 10 ஆயிரம் மானியம் வீதம் 19.7 லட்சமும், ரூ. 50 ஆயிரம் வங்கிக் கடன் வீதம் 98.50 லட்சமும் மொத்தம் ரூ. 118.20 லட்சம் விரைவில் வழங்கப்படும்.

இந்த ஆண்டில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளில் 300-ம், ஊரகப் பகுதிகளில் 700 மகளிர் சுய உதவிக் குழுக்களும் அமைக்கப்படவுள்ளன. ஒரு குழுவிற்கு குறைந்த பட்சம் 12 உறுப்பினர்கள் முதல் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் வரை இருக்கலாம். ஊரகப் பகுதிகளில் உருவாக்கப்படும் 700 குழுக்களில் அதிக முன்னுரிமை, ஊராட்சிகளில் 250 குழுக்களும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி செய்யும் மகளிரைக் கொண்டு 450 குழுக்களும் அமைக்கப்படும்.

பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் மகளிர் திட்டம் நிதியிலிருந்து 900 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 540 லட்சம் சுழல் நிதி மற்றும் வங்கிக் கடன் வழங்கப்படும். தலா ரூ. 10 ஆயிரம் மானியம் மற்றும் ரூ. 50 ஆயிரம் வங்கிக் கடனுதவி மற்றும் பொருளாதாரக் கடனுதவியாக 150 குழுக்களுக்கு ரூ. 147.08லட்சம் மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும்.

வங்கி கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் மகளிர் திட்டத்தின் கீழ் இயங்கும் குழுக்களுக்கு ரூ. 34 கோடியும் மற்ற குழுக்களுக்கு ரூ. 3 கோடியும் மொத்தம் ரூ.37 கோடி கடனுதவி வழங்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில், 390 குழுக்களுக்கு தரம் பிரித்தல் பணி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி ஒவ்வொரு மாதமும் அனைத்து வட்டார அலுவலகங்களிலும் மகளிர் திட்ட அலுவலர்களால் நடத்தப்படும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மறு சீரமைப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில், மகளிர் திட்ட அலுவலர் அய்யாறு, முன்னோடி வங்கி மேளாளர் சந்திரசேகரன், நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் சங்கரநாராயணன், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.