Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதியதாக 50 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள்

Print PDF

தினமணி 28.07.2010

புதியதாக 50 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள்

கோவை, ஜூலை 27: தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டில் புதியதாக 50 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கே.கோபால் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் ரூ.70 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுழல் நிதி, பொருளாதாரக் கடன், நேரடிக் கடன், பெரிய அளவிலான கடன் என வகைப்படுத்தி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலமாக இந்த கடனுதவி அளிக்கப்படும்.

ஊரகப் பகுதிகளில் 30 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களும், நகரப் பகுதியில் 20 ஆயிரம் குழுக்களும் அமைக்கப்படும். கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் புதியதாக ஆயிரத்து 650 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் இல்லாத இடங்களில் புதிய குழுக்களை ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இலக்கை எட்ட அலுவலர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உள்ள மகளிரை, சுயஉதவிக் குழுக்களில் இடம்பெறச் செய்ய வேண்டும். கோவை மாவட்டத்தில் ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நடப்பு ஆண்டில் சுழல் நிதி, 280 குழுக்களுக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பொருளாதாரக் கடன் வழங்கப்படும். ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகளுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பாகச் செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ. 1 லட்சம் ஊக்கத் தொகையும் அளிக்கப்படும்.

இதைத் தவிர, தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 500 இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரித்தல், பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி, அதை பிளாஸ்டிக் கம்பெனிகளுக்கு வழங்கும் தொழிலில் மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிகளவில் ஈடுபடுத்தலாம் என்றார். மாவட்ட ஆட்சியர் பி. உமாநாத், துணை ஆட்சியர் (பயிற்சி) கந்தசாமி, மகளிர் திட்ட அலுவலர் மோ.சுந்தரம், முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.நந்தகோபால், வங்கியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.