Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புனே மாநகராட்சி பெண் கவுன்சிலர்களுக்கு திருவனந்தபுரத்தில் பயிற்சி

Print PDF

தினகரன் 30.09.2010

புனே மாநகராட்சி பெண் கவுன்சிலர்களுக்கு திருவனந்தபுரத்தில் பயிற்சி

புனே,செப்.30: புனே மாநகராட்சி பெண் கவுன்சிலர்கள் திருவனந்தபுரத்தில் நடக்கும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் நவம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் அகில இந்திய உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள புனேயில் இருந்து பெண் கவுன்சிலர்கள் கேரளா செல்கின்றனர்.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதோடு அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும் நேரில் ஆய்வு செய்கின்றனர். இதற்காக புனே மாநகராட்சி நிர்வாகம் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறது. இதற்கு மாநகராட்சி நிலைக்குழுவும் ஒப்புதல் கொடுத்துள்ளது.

ஆனால் இது போல் படிப்பு தொடர்பாக பயணம் மேற்கொள்ளும் கவுன்சிலர்கள் வந்த பிறகு என்ன கற்றுக்கொண்டனர் என்பது தொடர்பாக அறிக்கை எதையும் தாக்கல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எனவே இப்பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மும்பை உயர்நீதிமன்றமும் கடந்த 2008ம் ஆண்டு இது போன்ற படிப்பு தொடர்பான பயணத்திற்கு விதிமுறைகளை வகுக்கும் படி கேட்டுக்கொண்டது. ஆனால் இது வரை அரசு அது போன்ற விதிமுறைகள் எதையும் வகுக்கவில்லை என்பது குறிப்பிட்டதக்கது.