Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கர்ப்பிணி பெண்களுக்கு தாமதமின்றி நிதி உதவி: கரூர் கலெக்டர் உத்தரவு

Print PDF

மாலை மலர் 24.12.2009

கர்ப்பிணி பெண்களுக்கு தாமதமின்றி நிதி உதவி: கரூர் கலெக்டர் உத்தரவு

கரூரில் பிரசவ காலத்தில் தாய், சேய் கவனிப்பு, வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, தாய், சேய் இறப்பினைத் தடுத்தல் மற்றும் குடும்ப நலத்திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடை பெற்றது.

கூட்டத்தில் கரூர் கோட்டத்திற்குட்பட்ட 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கரூர் நகராட்சி மருத்துவமனை ஆகியவற்றில் குடும்ப நலத்திட்டம் மற்றும் தாய், சேய் கவனிப்பு, இறப்பினைத் தடுத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தி மருத்துவ அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கி கலெக்டர் பேசினார்.

அவர் பேசும்போது தெரிவித்ததாவது:-

மக்களின் நல வாழ்விற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலவாழ்வுத் திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருவதோடு, மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட உரிய மருத்துவ சேவையினையும் வழங்கி வருகிறது.

பெண்களின் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலிருந்து அவர்களை கவனிப்புக்கு உற்படுத்தி, உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு, தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை வழங்கி, உரிய காலங்களில் மருத்துவப் பரிசோதனை, தடுப்பூசி மற்றும் சிகிச்சையினை வழங்கி தாயையும் சேயையும் காத்திட வேண்டும்.

ஒவ்வொரு மனித உயிரும் மிக மேலானதாகும். எனவே, கர்ப்ப காலத்தில் தாய், சேய் இறப்பு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் ரூ.6ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை வழங்குவதில் எவ்வித தாமதமுமின்றி தகுதியுடைய பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும்.

ஒவ்வொரு மருத்துவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்கு சேவை செய்திட வேண்டும். மேலும், செவிலியர் உள்ளிட்ட இதர மருத்துவ ஊழியர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும். மருத்துவமனைகளுக்கு தேவையான வசதிகளைச் செய்திட மருத்துவ அலுவலர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில், நலப் பணிகள் இணை இயக்குநர் (பொ) டாக்டர்.அக்பர்அலி, துணை இயக்குநர்கள் டாக்டர். சதாசிவம் (சுகாதாரப்பணிகள்), டாக்டர். செல்வராணி (மருத்துவப் பணிகள்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) குருராஜன் மற்றும் தொடர்புடைய மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 24 December 2009 11:37