Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரும் உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: அமைச்சர் நெப்போலியன்

Print PDF

தினமலர் 29.03.2010

வரும் உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: அமைச்சர் நெப்போலியன்

பெரம்பலூர்:உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் நெப்போலியன் கூறினார்.பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. எம்எல்ஏ ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.விழாவில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை இணை அமைச்சர் நெப்போலியன் பேசுகையில், முதல்வர் கருணாநிதி மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் பெறவேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் அடிப்படையில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைத்து, அவர்கள் பொருளாதார மேம்பாடு அடைவதற்கான திட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2009-10ம் ஆண்டில் இன்று வரையில் ரூ.15.46 கோடி வங்கி கடனாக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் திட்டத்தில் இணைந்த குழுக்களுக்கு மட்டும் ரூ 14.92 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. 515 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ 60ஆயிரம் வீதம் சுழல்நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 82 குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்படுகிறது. இதன்படி சுயஉதவிக்குழுக்களுக்கு மகளிர் திட்டத்தின் மூலம் மொத்தம் 3.60 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில் இதுவரையில் 108 ஊராட்சிகளுக்கு 86ஆயிரத்து 897 டிவி வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும்நோக்கில் 33 சதவீத இடஒதுக்கீடு கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

மகளிருக்கு வரும் உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படவுள்ளது. ஊனமுற்றவர்களின் மனம் எந்த வகையிலும் புண்படக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் அவர்களை மாற்றுத்திறனுடையோர் என அழைக்க வேண்டும் என முதல்வர் சட்டம் இயற்றியுள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 6ஆயிரத்து 374 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும், 2ஆயிரத்து 229 மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ.14லட்சம் மதிப்பிலான கழிவு நீர் அகற்றும் வாகனம், ரூ. 21லட்சம் மதிப்பிலான 15 குப்பைத்தொட்டிகளுடன்கூடிய நவீன குப்பை அள்ளும் வாகனம் ஆகியவற்றின் இயக்கத்தை அமைச்சர் நெப்போலியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த சிறு புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.

விழாவில் டிஆர்ஓ பழனிசாமி, நகராட்சி தலைவர் ராஜா, துணை தலைவர் முகுந்தன், யூனியன் சேர்மன்கள் பெரியசாமி, முத்துக்கண்ணு, மகாதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முகஉதவியாளர்(பொது) தேவதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் முகமது ஆரிப், ஆர்டிஓ பாலுசாமி, பிஆர்ஓ கண்ணதாசன், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் செல்வராஜ், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் கோதண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அமல்ராஜ் வரவேற்றார். முடிவில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் தெய்வநாயகி நன்றி கூறினார்.

Last Updated on Monday, 29 March 2010 06:14