Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குற்றாலம் ஐந்தருவியில் கடைகள் அகற்றம்

Print PDF

தினமணி     18.05.2010

குற்றாலம் ஐந்தருவியில் கடைகள் அகற்றம்

தென்காசி, மே 17: குற்றாலம் ஐந்தருவியில் பெண்கள் குளிக்கச் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை பேரூராட்சி நிர்வாகம் திங்கள்கிழமை அகற்றியது. இதற்கு கோயில் நிர்வாகம் மற்றும் கடை உரிமையாளர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குற்றாலம் ஐந்தருவியில் ஐந்தருவி அய்யனார் சாஸ்தா கோயில் உள்ளது. இப் பகுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. ஆனால், இந்த ஆண்டு அப் பகுதியில் கடைகள் ஏலம் விடப்படவில்லை.

அப் பகுதியில் உள்ள 34 சென்ட் நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என கோயில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என பேரூராட்சி நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் வாதாடினர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, கோயில் நிர்வாகம் தொடுத்திருந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், ஐந்தருவி பகுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டு நடத்தப்பட்டு வந்த கடைகளை மே 16ஆம் தேதிக்குள் அகற்றுமாறு கடையின் உரிமையாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை தென்காசி கோட்டாட்சியர் இல.மூர்த்தி முன்னிலையில், குற்றாலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி ராஜையா தலைமையில் பேரூராட்சிப் பணியாளர்கள் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு கடைகளின் உரிமையாளர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் இருப்பதால் தற்போது கடைகளை இடிக்கக் கூடாது என கோட்டாட்சியரிடம் கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் முறையீடு செய்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் கடையின் உரிமையாளர்களும், கோயில் நிர்வாகத்தினரும் முறையிடுமாறு கோட்டாட்சியர் தெரிவித்தார்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. தென்காசி டி.எஸ்.பி. ஸ்டாலின், குற்றாலம் ஆய்வாளர் விஜயகுமார் அங்கு வந்தனர். போலீஸôரும் குவிக்கப்பட்டனர். இதையடுத்து கடைகள் அகற்றப்பட்டன. அப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.