Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர்ப்புற மக்களுக்கு வட்டி: தள்ளுபடியுடன் வீட்டுக்கடன்

Print PDF

தினமலர்    21.05.2010

நகர்ப்புற மக்களுக்கு வட்டி: தள்ளுபடியுடன் வீட்டுக்கடன்

ஈரோடு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வட்டி தள்ளுபடியுடன் கூடிய வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தொடர்பாக கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள நகராட்சி கமிஷனர்கள், வங்கிகளின் மண்டல மேலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுலகத்தில் நடந்தது.

வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசியதாவது: நகர்ப்பகுதியில் வசதிக்கும் ஏழை மக்கள் வீடு கட்டுவதற்காக வட்டி தள்ளுபடியுடன் கூடிய வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு 2008 முதல் செயல்படுத்துகிறது. பொருளாதார நெருக்கடியால் ஆறு மாதங்களுக்கு முன்பு வங்கிகள் மந்த நிலையில் இருந்தன. தற்போது சகஜநிலைக்கு திரும்பிவிட்டன. பட்டா நிலத்தின் அடிப்படையில் ஏழை மக்களுக்கு தள்ளுபடியுடன் கூடிய கடன் வழங்க மத்தியரசு உத்தரவிட்டுள்ளது. கடன் தவணை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் செலுத்தலாம். கடன் வாங்கும் ஏழை மக்களின் இடத்தின் மதிப்பு, வீடு கட்டும்போது ஒரு லட்சம் ரூபாயாக இருந்தாலும், அடுத்த பத்து ஆண்டுகளில் அதன் மதிப்பு பல மடங்கு உயரும். இதனால், வங்கிகள் கடன் வழங்க தயங்க வேண்டியதில்லை. தமிழகத்தில் டவுன் பஞ்சாயத்துகளையும் சேர்த்து மொத்தம் 45 சதவீதம் வரை நகர்ப்பகுதி உள்ளது. இத்திட்டம் மூலம் டவுன் பஞ்சாயத்து மக்களும் பயன்பெறலாம்.

தமிழகம் அனைத்து திட்டங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் 34 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டும், இதுவரை எவருக்கும் கடன் வழங்கவில்லை. பட்டா உள்ளவர்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். வங்கிகள் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் தொகை வழங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற, பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு குறைந்தபட்சம் 27 சதுர மீட்டர் பரப்பில் நிலம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருவாய் 5,000 ரூபாயாக இருக்க வேண்டும். கடன் தொகை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஐந்து சதவீத வட்டி சலுகை வழங்கப்படும். குறைந்த வருவாய் பிரிவினருக்கு 5001 ரூபாயிலிருந்து பத்து ஆயிரம் ரூபாய் வரை மாத வருவாய் உள்ளவர்களுக்கு, கடன் தொகையில் ஒரு லட்சத்துக்கு ஐந்து சதவீதம் வட்டி சலுகை வழங்கப்படும்.

திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் வீட்டு மனைக்கான பட்டா, ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வருமான சான்றிதழ், ஃபோட்டோ வேண்டும். ஒருவரின் பூர்வீகத்தை கூறுவது அவர் குடியிருக்கு ஊரில் உள்ள வீடுதான். வீடு அத்யாவசியமானது. வங்கியாளர்கள் தயங்காமல் இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். கடன் திரும்ப செலுத்துவது குறித்து வங்கியாளர்கள் கவலைப்பட வேண்டாம். 2008ல் இத்திட்டம் அறிவித்தபோதும் விழிப்புணர்வு இல்லாததால், தமிழகத்தில் பின்தங்கியுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் கடன் பெறுவோருக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் எவ்வித குறியீடும் இல்லை. எத்தனை பேர் விண்ணப்பித்தாலும் அனைவருக்கும் வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார். சென்னை வீட்டுவசதி வாரிய தொடர்பு அலுவலர் கிறிஸ்டோபர், மாவட்ட கலெக்டர் சுடலைக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.