Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீடு கட்ட வாங்கும் கடனுக்கு வட்டி மானியம் தென் மாவட்டங்களில் 9,232 பேர் விண்ணப்பம்

Print PDF

தினமணி    28.05.2010

வீடு கட்ட வாங்கும் கடனுக்கு வட்டி மானியம் தென் மாவட்டங்களில் 9,232 பேர் விண்ணப்பம்

திருநெல்வேலி, மே 27: தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழை மக்கள் வீடு கட்ட வங்கிகளில் வாங்கும் கடனுக்கு வட்டி மானியம் அளிக்கும் திட்டத்தில் பயன்பெற தென் மாவட்டங்களில் 9,232 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்தார்.

மத்திய அரசானது, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களில் ஆண்டு வருமானம் ரூ.36 ஆயிரத்திற்கு மேல் உள்ள, சொந்த நிலம் வைத்திருப்போருக்கு 300 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு ரூ.1.60 லட்சம் வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடனுதவி வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடன் பெறுவோருக்கு ரூ.1 லட்சத்திற்கு வட்டி மானியமாக 5 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது. எஞ்சியுள்ள கடனுக்கு வழக்கமான கடன் வட்டி விகிதம் பொருந்தும்.

தமிழ்நாட்டில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த அரசு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது. இதற்கான மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி வங்கி மேலாளர்கள் மற்றும் அனைத்து வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டஇக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறியதாவது:

மத்திய அரசின் வட்டி மானிய திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் 2,781 மனுக்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 5,274 மனுக்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 203 மனுக்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 974 மனுக்களும் என மொத்தம் 9,232 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு விரைவில் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் அர. சங்கர், தேசிய வீட்டுவசதி வங்கி தொடர்பு மேலாளர் கிறிஸ்டோபர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன், வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர்கள் நடேசன், மனோகரன், திருநெல்வேலி மாவட்ட முன்னோடி வங்கி

மேலாளர் ஜான்பெலிக்ஸ் பெர்ணான்டோ, ஊராட்சிகள் உதவி இயக்குநர் (பயிற்சி) கோமகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்