Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒரே நாளில் 38 பேர் பிடிபட்டனர் சிக்னலில் பிச்சை எடுப்போரை பிடிக்கும் பணி துவங்கியது

Print PDF

தினகரன் 08.06.2010

ஒரே நாளில் 38 பேர் பிடிபட்டனர் சிக்னலில் பிச்சை எடுப்போரை பிடிக்கும் பணி துவங்கியது

சென்னை, ஜூன் 8: நகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களை பிடிக்கும் பணி நேற்று துவங்கியது. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து பிச்சைக்காரர்களும் பிடிபடுவார்கள் என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை நகரில் சிக்னல்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பிச்சை எடுப்பவர்களை பிடித்து மறுவாழ்வு அளிக்க மாநகராட்சி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று காலை அண்ணாசாலை தர்கா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், கோயம்பேடு பஸ் நிலையம், அண்ணாநகர் ரவுண்டானா, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிச்சைக்காரர்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த பணியில் சென்னையில் உள்ள 10 மண்டலங்களின் உதவி சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அண்ணாசாலை தர்கா பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களை பிடிக்கும் பணியை நேரில் ஆய்வு செய்த மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

சென்னையில் பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து 18 தனியார் தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

பிச்சை எடுக்கும் முதியோரை, முதியோர் இல்லத்திலும், பெண்களை, பெண்கள் நலவாழ்வு மையத்திலும், சிறுவர்களை, பாதுகாப்பு மையத்திலும் சேர்த்து, மறுவாழ்வு அளிக்கப்படும்.

சென்னையில் பிடிபடும் பிச்சைக்காரர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முடி திருத்தம் செய்து, புதிய ஆடை வழங்கப்பட்டு, உடல் பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை வழங்கப்படும். பின்னர் நல்ல நிலையில் உள்ள பெண்களை காப்பகத்தில் சேர்ப்போம். நல்ல உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தகுந்த வேலைகள் வாங்கி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரேநாளில் சென்னையில் 8 பெண்கள் உட்பட 38 பிச்சைக்காரர்கள் பிடிபட்டுள்ளனர்.

சாலையோரம், நடைபாதைகளில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திக் கொண்டு பிச்சை எடுப்பவர்களை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் இந்த வாரம் முழுவதும் பிடிப்பார்கள். ஒரு வாரத்தில் அனைத்து பிச்சைக்காரர்களும் மீட்கப்பட்டு, சென்னையில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும். இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ஓட்டம் எடுத்த பிச்சைக்காரர்கள்

அண்ணாசாலையில் உள்ள தர்கா மற்றும் சிக்னல் பகுதியை சுற்றி ஏராளமான பிச்சைக்காரர்கள் உட்கார்ந்திருப்பார்கள். நேற்று காலை 11 மணி அளவில் மாநகராட்சி வாகனங்களில் அதிகாரிகள் வந்து பிச்சைக்காரர்களை பிடிக்கத் தொடங்கினர். இதைப்பார்த்ததும் உடல் ஆரோக்கியத்துடன் இருந்த பிச்சைக்காரர்கள் ஓட்டம் பிடித்தனர். ஒரு சிலர் தர்கா வளாகத்துக்குள் புகுந்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் வயதான பெண் பிச்சைக்காரர்கள் மட்டுமே சிக்கினர். அவர்கள் மாநகராட்சி வேனில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் சிக்னல் பகுதியில் கண்காணித்து குழந்தையுடன் பிச்சை எடுப்பவர்களை குறி வைத்து பிடித்துச் சென்றால் மாநகராட்சியின் திட்டம் முழு அளவில் வெற்றி பெறும். ஒரு வாரம் நடவடிக்கை