Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாவட்டத்தில் 2,800 பேர் சாலையோரத்தில் வசிப்பு

Print PDF

தினகரன் 22.07.2010

சேலம் மாவட்டத்தில் 2,800 பேர் சாலையோரத்தில் வசிப்பு

சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியும், ஆத்து£ர், மேட்டூர், இடைப்பாடி, நரசிங்கபுரம் உட்பட நான்கு நகராட்சிகளும் உள்ளன. சேலம் மாவட்டத்தில் ஆண்கள் 15,63,634 பேரும், பெண்கள் 14,82,846 பேர் உட்பட 30 லட்சத்து 16 ஆயிரத்து 346 பேரும் வசிக்கின்றனர். மாநகராட்சி எல்லைக்குள் சுமார் 7 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சேலம் நகரில் கடைவீதி, சுகவனேஸ்வரர் கோயில், பழைய பேருந்து நிலையம், புதியபேருந்து நிலையம், ஜங்சன், டவுன் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலானோர் சாலையோரங்களில் வீடில்லாமல் வசித்து வருகின்றனர். சேலம் மாநகர காவல் துறையின் கணக்கெடுப்பின் படி சேலம் மாநகர எல்லைக்குள் 340 குடும்பங்களில் 1800 பேர் வரை சாலையோரத்தில் வசிக்கின்றனர். இதே போல் சேலம் மாவட்ட அளவில் நான்கு நகராட்சி பகுதிகளிலும் சுமார் ஆயிரம் பேர் வரை வசித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 2,800 பேர் சாலையோரங்களில் வசித்து வருகின்றனர். கணக்கெடுக்கும் பணி துவங்கியது

இதையடுத்து தமிழக அரசு சமூக நலம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் தங்கும் விடுதிகள் அமைக்க உள்ளது. சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் துறை செயலர் ராமமோகனராவ் கடந்த 11.5.2010ம் தேதி நகராட்சி நிர்வாக செயலர் நிரஞ்சன் மார்டிக்கு தங்கும் விடுதிகள் குறித்து செயல்படுத்த கடிதம் அனுப்பினார். இதன் பேரில் நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் கடந்த 8.6.10ல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் வீடின்றி சாலை யோரம் வசிப்பவர்களை கணக்கெடுக்க வேண்டும். எண்ணிக்கைக்கேற்ப எத்தனை விடுதிகள் அமைக்க வேண்டும் என்பது குறித்த விரிவான அறிக்கையை (ஆக்சன் பிளான்) ஒரு மாதத்திற்குள் அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் நகர்புறங்களில் வீடின்றி வசிப்பவர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. சேலம் மாநகராட்சி சார்பில் சாலையோரங்களில் தங்குபவர்களை பற்றி கணக்கெடுக்கும் பணியில் மாநகர் நல அலுவலர் பொற்கொடி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை வீதி வீதியாக சென்று கணக்கெடுத்து வருகின்றனர்.

இது பற்றி சேலம் மாநகராட்சி ஆணையர் பழனிசாமி கூறியதாவது: உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தமிழக அரசின் உத்தரவின் பேரில் சேலம் மாநகராட்சி எல்லைக்குள் வீடில்லாத குடும்பங்கள், ஆதரவற்றவர்கள், அனாதைகள், முதியவர்கள் உள்ளிட்ட சாலையோர வாசிகள் பற்றி கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவர்களுக்கு பங்கர் டைப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. ஏற்கனவே இது போன்று சேலத்தில் விடுதிகள் நடத்தி வரும் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீடு செயல் திட்ட அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஆணையர் பழனிசாமி கூறினார்.