Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசைகள் அற்ற இந்தியா உருவாக்குவது ஐந்து ஆண்டுகளுக்குள் சாத்தியமில்லை

Print PDF

தினமலர் 16.08.2010

குடிசைகள் அற்ற இந்தியா உருவாக்குவது ஐந்து ஆண்டுகளுக்குள் சாத்தியமில்லை

புதுடில்லி : "குடிசைகள் அற்ற இந்தியாவை உருவாக்க குறைந்த பட்சம் 20 ஆண்டுகளாவது தேவைப்படும்' என, பரீக் கமிட்டி கூறியுள்ளது.

இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 2009 ஜூன் 4ம் தேதி பார்லிமென்டில் உரையாற்றிய போது, "அடுத்த ஐந்து ஆண்டுகளில், குடிசைகளே இல்லாத இந்தியாவை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது' என்றார். இந்த திட்டத்திற்கு, "ராஜிவ் ஆவாஸ் யோஜனா' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.அதன்படி, இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக ஆய்வு செய்து, திட்ட மதிப்பீட்டை உருவாக்க, எச்.டி.எப்.சி., தலைவர் தீபக் பரீக் தலைமையில் எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழு, கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது.இந்த குழு, கடந்த ஏப்ரல் மாதம் தனது ஆய்வறிக்கையை அளித்தது. அதில், ஐந்து ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க சாத்தியமில்லை என்றும், இந்த திட்டத்திற்கான கால அவகாசத்தை 20 ஆண்டுகளாக நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து லோக்சபாவில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் செல்ஜா கூறியதாவது:பரீக் கமிட்டி அளித்த ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், "ராஜிவ் ஆவாஸ் யோஜனா' திட்டம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இதற்கு முன்னோட்டமாக, "குடிசைகள் அற்ற நகரம்' மற்றும் "குடிசைகள் அற்ற மாநிலம்' ஆகிய திட்டங்கள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, குடிசைகளை கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த திட்டங்களுக்காக, 2009-10 ஆண்டில், பட்ஜெட்டில் 20 மாநிலங்களுக்கு 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில்,60 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. "ராஜிவ் ஆவாஸ் யோஜனா' திட்டத்திற்காக 2010-11ம் ஆண்டில் 1,270 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.குடிசையில் வசிப்பவர்களுக்கு, சொத்துரிமை அடிப்படையில், இருப்பிட பாதுகாப்பை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று பரீக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.நகரங்களில் குடிசைப் பகுதிகள், பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. குடிசைவாசிகளுக்கு, அவர்களுக்கு வசிக்கும் பகுதியிலேயே வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் அக்கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.இவ்வாறு செல்ஜா கூறினார்.