Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவிகளுக்கு இலவச நாப்கின்: ஆட்சியர்

Print PDF

தினமணி 12.03.2010

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவிகளுக்கு இலவச நாப்கின்: ஆட்சியர்

கிருஷ்ணகிரி, மார்ச் 11: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் இன்னும் 6 மாதத்துக்குள் வழங்கப்படும் எனமாவட்ட ஆட்சியர் வே..சண்முகம் கூறினார்.

மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பள்ளிகளின் சுத்தம், சுகாதார கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் யுனிசெப்பின் அனைத்துத் திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத்தை கடைபிடிக்கும் 94 பள்ளிகளுக்கு 10 ஸ்டார் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பெண் கல்வி மேம்பாடு சிறப்புத் திட்டத்தின் கீழ் கெலமங்கலம், வேப்பனப்பள்ளி, சூளகிரி ஒன்றியங்களில் உள்ள 87 பள்ளிகளில், ஒரு பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் வீதம் 250 ஆசிரியர்களுக்கு சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 7 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் 5,500 மாணவியருக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது.

தற்போது 50 பள்ளிகளில் நாப்கின் வெண்டிங் மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 6 மாத காலத்திற்குள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவியர்களுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட உள்ளன. மகளிக் குழுக்கள் தயாரிக்கும் நாப்கின்கள், பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு மானிய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது என்றார் அவர்.

இக்கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமானப்பணிகள், பள்ளி செல்லாக் குழந்தைகளின் விவரம், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்வி மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி, உண்டு உறைவிடப்பள்ளி, தேசிய பெண் கல்வி மேம்பாட்டு சிறப்புத் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முதன்மைக் கல்வி அலுவலர் எம்.பாஸ்கரன், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் சேமலை, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சுப்ரமணியன், யுனிசெப் ஒருங்கிணைப்பாளர் லேலுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Friday, 12 March 2010 10:27