Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குளக்கரையோரம் முளைக்கும் கடைகள்: ஆக்கிரமிப்புக்கு ரெடி

Print PDF

தினமலர் 06.05.2010

குளக்கரையோரம் முளைக்கும் கடைகள்: ஆக்கிரமிப்புக்கு ரெடி

கோவை : முத்தண்ணன் குளக்கரையின் ஒரு பகுதியான தடாகம் ரோட்டில் வீடுகள் ஆக்கிரமித்திருப்பதை போன்றே, குளக்கரையின் தென் பகுதியில் பழைய மரப்பொருள் விற்பனை செய்யும் கடைகள் முளைத்துள்ளன.

பொதுப்பணித்துறையிடமிருந்தஒன்பது குளங்களை, பராமரிப்புக்காக மாநகராட்சி தன் வசம் கொண்டு வந்தது. குளங்களை ஒப்படைக்கும் விழாவில் பேசிய மேயர், 'குளங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படும், குளக்கரையை சுற்றி நடைபாதை அமைக்கப்படும். பூங்காக்கள், சிறுவர் சிறுமியர் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்படும்' என்றெல்லாம் உறுதியளித்தார்.

குளங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டிற்கு வந்து மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இதுவரை எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. எந்த அடிப்படை பணியும் துவக்கப்படவில்லை. பொதுப்பணித்துறை வசம் இருந்த போது ஓரளவு பராமரிப்பு இருந்தது. இரண்டு குளங்களுக்கு ஒரு 'வாட்சர்' இருந்தார். குளத்தின் அன்றாட நீர் இருப்பு குறித்தும், குளக்கரை பராமரிப்பு குறித்தும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.

நகரிலுள்ள குளங்களை பராமரிக்க பொதுப்பணித்துறை சார்பில் உதவிப்பொறியாளர் ஒருவர் பணியமர்த்தப்பட்டிருந்தார். குத்தகைக்கு எடுத்துள்ள மீனவர்கள் தவிர பிறர் குளத்தினுள்ளே செல்ல அஞ்சினர். கட்டடக்கழிவுகளை குளக்கரையில் கொட்டமுடியாமல் சிரமப்பட்டனர். மாநகராட்சி எடுத்துக் கொண்ட பின், பொதுப்பணித்துறையின் சார்பில் பராமரிப்பிற்கென்று நியமிக்கப்பட்ட பணியாளர் வேறு பணிக்கு மாறுதல் செய்யப்பட்டார். பதிலாக மாநகராட்சி சார்பில் குளக்கரை பராமரிப்பு பணியில் இது வரை யாரும் பணியமர்த்தப்படவில்லை.

கண்காணிக்க ஆள் இல்லை என அறிந்தவுடன், ஆக்கிரமிப்புகள் தொடங்கியுள்ளன. கட்டடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. முத்தண்ணன் குளக்கரையோரம் கட்டடக்கழிவுகளை கொட்டுவதால் கரையின் உயரம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

கரை உயர்ந்ததால், தடாகம் ரோடு பகுதியிலுள்ள குளக்கரையை ஆக்கிரமித்து வீடுகள் உள்ளதை போலவே, குளத்தின் தென்பகுதியான, எஸ்.பி..., பள்ளி செல்லும் ரோட்டில் பழைய ஜன்னல், கதவு மரச்சாமான் விற்பனை கடைகள் முளைத்துள்ளன.

தடாகம் ரோட்டிலிருந்து முத்தண்ணன் குளத்திற்கு செல்லும் பாதையில் குறுகிய பாலத்தை தாண்டியவுடன் வலதுபக்கத்தில் பழைய மரச்சாமான்களை விற்பனை செய்யும் இரு கடைகள் துவங்கப்பட்டன. ஒரு கடையை பார்த்து, கரை முழுவதும் இது போன்று கடைகள் துவக்கப்பட உள்ளன.முளையிலேயே கிள்ளி எறியா விட்டால், பிரச்னை பெரியதாகி, ஆக்கிரமிப்பு அதிகமாகி விடும்.