Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி         14.05.2010

கரூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கரூர், மே 13: கரூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கரூர் நகராட்சி ஆணையராக அண்மையில் பொறுப்பேற்ற கோ. உமாபதி, நகராட்சிப் பகுதிகளில் சுகாதாரத்தைப் பேணும் வகையில், தூய்மைப் பணி, பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்திருக்கும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 25 பேர், 3 ஷிப்ட்களில் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கரூர் பேருந்து நிலையத்துக்குள் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நகராட்சி ஆணையர் உமாபதி தலைமையில் நகராட்சிப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைவிட கூடுதலாக செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது, கடைகளில் காலாவதி பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று நகராட்சி ஆணையர் உமாபதி ஆய்வு செய்தார்.

ஆணையர் எச்சரிக்கை

அரசின் விதிமுறைகளை மீறி கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபடக் கூடாது. மேலும், கடைகளில் சுத்தமான, தரமான பொருள்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். சுகாதாரமற்ற பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் கண்டறியப்பட்டால், அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளின் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அனைத்துக் கடைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நகராட்சி வேண்டுகோள்

பேருந்து நிலையத்தை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பராமரிப்புப் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தரை தளத்தை சீரமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறவுள்ளன என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்ட போது நகர்நல அலுவலர் கே. சந்தோஷ்குமார், நகராட்சி அலுவலர்கள் ஜானகிராமன், . ராஜா, குத்தகை அலுவலர் பாபு, உதவிப் பொறியாளர் சரவணன், ஆய்வாளர்கள் ஜானகிராமன், நாசர், ஆர். செந்தில், என். தேவராஜ், ஆர். சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.