Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்: வருவாய் கோட்டாட்சியர்

Print PDF

தினமணி 27.07.2009

ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்: வருவாய் கோட்டாட்சியர்

ராமநாதபுரம், ஜூலை 26: ராமநாதபுரத்தில் கண்மாய், ஓம் சக்தி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றப்படும் என வருவாய் கோட்டாட்சியர் து.இளங்கோ சனிக்கிழமை தெரிவித்தார்.

விபத்துகளைத் தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர்கள் இந்திரஜித் (ராமநாதபுரம்), ராஜாராம் (ராமேசுவரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வருவாய் கோட்டாட்சியர் பேசியதாவது:

ராமநாதபுரத்தில் பாரதி நகர், சர்ச் பஸ் நிறுத்தம், அரசு மருத்துவமனை ஆகிய 3 இடங்களிலும் தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பயணிகள் அமருமிடம் அமைக்கப்பட உள்ளது.

நகரில் ஊரணிகளில் 86 இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவை அனைத்தும் விரைவில் அகற்றப்படும். ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள அரண்மனைச் சாலை தாற்காலிகமாக சரிசெய்யப்படும். அப்பகுதி ஆக்கிரமிப்புகளும் ஒரு வாரத்தில் அகற்றப்படும்.

நகரில் புதிய பஸ் நிலையம் முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள மணல் குவியல்கள் அகற்றப்படும். சாலைகளில் செங்கல், மணல், கருங்கல் ஜல்லிகளை போக்குவரத்துக்கு இடையூறாக வைத்திருந்தால் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.

சாலைகளில் திரிகின்ற மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கோசாலையில் அடைக்கப்படும்.

ராமேசுவரம் திட்டக்குடி பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தாமல், ஆனைகட்டி சத்திரம் பகுதியில் நிறுத்தப்படும் என்றார் அவர்.

போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வின், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் ரெங்கசாமிபாண்டியன், விபத்து மீட்புச் சங்க மாவட்ட தலைவர் எம்.சண்முகசுந்தரம், மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட மதுரம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.