Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போடி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமணி    24.05.2010

போடி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

போடி, மே 23: போடியில் விடுமுறை நாளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அதிகாரிகள் அகற்றி, காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

போடி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்படுகின்றன. சிலர் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என எண்ணி ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். அவ்வாறு விடுமுறை நாளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சிரமமாக இருந்து வந்தது.

போடிக்கு மேற்கே சூரியா நகரில் பூங்கா அமைய உள்ள பகுதியில் இப்பகுதியை சேர்ந்த சிலர் ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். இதற்காக குடிசை அமைக்கும் பணி நடைபெற்றது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தது.

உடனடியாக ஆணையர் க. சரவணக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, சென்றாயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு செய்வதைத் தடுத்து நிறுத்தி, ஆக்கிரமிப்பு செய்யப் பயன்படுத்திய பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஆணையர் கூறியதாவது:

நகராட்சிப் பகுதியில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். போடி நகரில் உள்ள பூங்காக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றில் பொழுது போக்கு அம்சங்களை உருவாக்கி பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

சூரியா நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதைத் தடுத்து, அவர்கள் மீது போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. நகரில் ஆக்கிரமிப்பு செய்தால் எந்த நேரத்திலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதோடு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Last Updated on Tuesday, 25 May 2010 04:18