Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெசன்ட் நகர் மயானத்தில் சமாதி இடிப்பு மாநகராட்சிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Print PDF

தினமலர்         28.05.2010

பெசன்ட் நகர் மயானத்தில் சமாதி இடிப்பு மாநகராட்சிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை : சென்னை பெசன்ட்நகர் மயானத்தில் கட்டப் பட்ட சமாதியை இடிக்க தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சமாதி இடிக்கப்படவில்லை என்றால், இடிப்பதற்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.பெசன்ட்நகரில் வசிக்கும் டாக்டர் அருள்பிச்சை நாராயணன் தாக்கல் செய்த மனு:எனது தந்தை முத்துகுமாரசாமி சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். வடலூர் ராமலிங்க அடிகள் பற்றி பல நூல்களை அவர் எழுதியுள்ளார். 79 வயதில் அவர் இறந்தார்.பெசன்ட்நகரில் உள்ள மயானத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டது. மாநகராட்சியின் அனுமதி பெற்று, சமாதி அமைத்தோம். பெசன்ட்நகர் மயானத்தில் சில சமாதிகள் உள்ளன.

மயானத்தில் உள்ள சமாதிகளை இடிப்பதாக நான் கேள்விப்பட்டேன். எனது தந்தையின் சமாதியை இடிக்கக் கூடாது என மாநகராட்சிக்கு தந்தி அனுப்பினேன். ஆனால், எனது தந்தையின் சமாதியில் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல், சமாதியை இடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முடியாது.

சமாதி கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த போது, அதிகாரிகள் தடுத்தனர். எனவே, மாநகராட்சி கவுன்சிலின் அனுமதி பெற்று கட்டிய சமாதியை இடிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். அதே இடத்தில் மீண்டும் சமாதி கட்டுவதில் மாநகராட்சி குறுக்கீடு செய்ய தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதிகள் தனபாலன், அரிபரந்தாமன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.வேல்முருகன்ஆஜரானார்.சமாதி இடிக்கப்படவில்லை என்றால், அதை இடிப்பதற்கு தடை விதித்து "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.