Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

Print PDF

தினமணி 03.06.2010

பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

கரூர், ஜூன் 2: கரூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

கரூரிலுள்ள முத்துக்குமாரசுவாமி பேருந்து நிலையம் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு, பொதுமக்கள் நடந்து செல்வதற்குக்கூட வழியில்லாமல் இருந்து வந்தது.

மேலும், சுத்தம் செய்யப்படாத சாலைகள், கழிவறைகள் என்று சுகாதாரச் சீர் கேட்டை விளைவிக்கும் வகையிலும் இருந்தது. இக்குறைகளை நீக்க வேண்டுமென கரூரிலுள்ள பல்வேறு அமைப்புகளும், நகர்மன்ற உறுப்பினர்களும் குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், கரூர் நகராட்சிக்குப் புதியதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் ஆர். உமாபதி இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முதல்கட்டமாக பேருந்து நிலையத்திற்குள் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன. கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திற்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் அண்மையில் மீட்கப்பட்டன. பேருந்து நிலையத்தைச் சுத்தம் செய்யும் பணியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எனினும், சில நாள்களில் ஆக்கிரமிப்பு கடைகள் வழக்கம் போல நடைபெற்றன. பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் அனுமதியில்லாத விளம்பரப் பதாகைகள் அமைக்கப் பட்டன.

இதையடுத்து, நகராட்சி ஆணையரின் உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், ஊழியர்கள் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

அப்போது, அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள், கடைகளின் விளம்பரப் பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டன. தொடர்ந்து இது போன்ற ஆய்வுகள் நடைபெறும். ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆணையர் ஆர்.உமாபதி.