Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியற்ற விளம்பரங்களை அகற்ற கமிஷனர் கெடு: கோவையை அழகுபடுத்த அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமலர் 09.06.2010

அனுமதியற்ற விளம்பரங்களை அகற்ற கமிஷனர் கெடு: கோவையை அழகுபடுத்த அதிரடி நடவடிக்கை

கோவை : கோவை நகரிலுள்ள விளம்பர பேனர்கள் மற்றும் அனுமதியற்ற விளம்பரங்கள் அனைத்தையும் அகற்ற மாநகராட்சி கமிஷனர் கெடு விதித்துள்ளார்.

கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, பல கோடி ரூபாய் மதிப்பில் கோவை மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. கோவை நகரை அழகுபடுத்தும் விதமாக, புதிய பூங்காக்கள், நடைபாதைகள், நடைபாதை பூங்காக்கள் அமைக்கப்பட்டு, சுவர் ஓவியங்கள் வரையப்படுகின்றன.பல கோடி ரூபாய் செலவில் நகரம் முழுவதையும் அழகு படுத்தும் பணி நடந்தாலும், அத்தனை அழகையும் மறைக்கும் வகையில், சாலையோரங்களிலும், மின் கம்பங்கள், பயனற்ற தொலைத் தொடர்பு கம்பங்கள் அனைத்திலும் விளம்பரங்களின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. தனியார் நிறுவனங்கள், அரசியல் அமைப்புகள் சார்பில் அனுமதியின்றி, நகரம் முழுவதும் ஏராளமான விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன.

நகரை அழகு படுத்தியும் அவை மக்களின் பார்வைக்குத் தெரிவதில்லை. சில நிறுவனங்கள், கடைகள் அல்லது நிறுவனங்களின் முன்பாக இரு சக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது என்பதற்காகவே, செம்மொழி மாநாடுக்கு வாழ்த்துச் சொல்வதைப்போல விளம்பர பேனர்களை வைத்துள்ளன. அரசியல் பிரமுகர்களும், முதல்வர், துணை முதல்வர் படத்தை வைத்து தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். தி.மு..,வினரால் இத்தகைய பிரமாண்ட பேனர்கள் வைத்ததை முதல்வரும், துணை முதல்வரும் பகிரங்கமாகவே கண்டித்துள்ளனர். இருந்தும், மாற்றுக் கட்சியினர், தனியார் அமைப்புகளின் சார்பில் ஏராளமான விளம்பர பேனர்கள், எந்த வித அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டுள்ளன. செம்மொழி மாநாடு நெருங்கும்போது, விளம்பர பேனர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பது நிச்சயம்.

இதேபோன்று, கோவை நகரில் அனுமதியற்ற விளம்பரப் பலகைகளும் மீண்டும் அளவுக்கு அதிகமாக முளைத்து வருகின்றன. முந்தைய கலெக்டர் பழனிக்குமார், இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். தற்போதுள்ள கலெக்டர் உமாநாத்துக்கு, செம்மொழி மாநாட்டுப் பணிகளைக் கவனிக்கவே போதிய நேரமிருப்பதில்லை.கடந்த சில மாதங்களில் கோவை நகரம் முழுவதும் பல இடங்களில் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நகரை அழகு படுத்தும் பணிக்காக, பல்வேறு தனியார் அமைப்புகளும், தங்கள் பணத்தைச் செலவழித்து வரும் நிலையில், எந்த அனுமதியுமில்லாமல் அரசியல்பிரமுகர்களின் ஆதரவில் இந்த விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதிகரித்துள்ள இந்த விளம்பரங்களை அகற்றினால் மட்டுமே, கோவை நகரை அழகு படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்துக்கும் பலன் கிடைக்கும். இது குறித்து வந்த கோரிக்கையை அடுத்து, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, நேற்று நகரம் முழுவதும் ஆய்வு செய்தார்.அப்போது, நகரின் பல பகுதிகளிலும் ஏராளமான விளம்பர பலகைகள் இருப்பதை அறிந்தார். அவற்றில், போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் இருந்த சில விளம்பரங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். மற்ற விளம்பரங்கள் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், ""கோவை நகரில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் அனைத்தையும், மூன்று நாட்களுக்குள் (ஜூன்10) அகற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல, மாவட்ட கலெக்டரிடம் முறையான அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகளையும், ஒரு வாரத்துக்குள் (ஜூன் 14) அவர்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். அகற்றப்படாத விளம்பரங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றும்; அதற்கான தொகை, அந்தந்த நிறுவனத்திடம் வசூலிக்கப்படும்,'' என்றார். எச்சரித்தபடியே, விளம்பர பேனர்களையும், விளம்பரப் பலகைகளையும் அகற்றினால் மட்டுமே, கோவை நகரை அழகு படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் முழு வெற்றி பெறும். இந்த விஷயத்தில், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது கோவை மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களின் அவசரக் கடமையாகும்.

அகற்றாததன் பின்னணி! கோவை ரயில்வே ஸ்டேஷனிலும் மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி பெறாமல் ஏராளமான விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் செலவில், ரயில்வே ஸ்டேஷன் முகப்பை அழகு படுத்தியும், அவை மக்கள் பார்வைக்குத் தெரியாமல் விளம்பரங்கள் மறைக்கின்றன. இதற்கு ரயில்வே துறையிலேயே எதிர்ப்பு இருந்தாலும், அதிகாரிகள் சிலர் இதனால் பயன் பெறுவதால் இவற்றை எடுக்க மறுத்து வருவதாகத் தெரிகிறது. அங்குள்ள விளம்பரங்கள் மற்றும் பெயர்ப் பலகைகள் அனைத்தையும் அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.