Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்; 25 ஆண்டுகாலமாக இருந்த காம்பளக்ஸ் இடிப்பு!

Print PDF

தினமலர் 11.06.2010

ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்; 25 ஆண்டுகாலமாக இருந்த காம்பளக்ஸ் இடிப்பு!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 25 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த கமர்சியல் காம்பளக்ஸ் கட்டடத்தை அதிகாரிகள் அகற்றினர். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஆக்கிரமித்த பகுதிகளில் மரகன்றுகளை நடுவதற்கும் அதிகாரிகள் முன்வரவேண்டும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து கொண்டே வருவதால் போக்குவரத்து இடையூறு அதிகமாக ஏற்படுவதுடன் விபத்துகளும் அதிகரித்துவிட்டது. இதை தடுக்கும் வகையில் கலெக்டர் ஹரிஹரன் உத்தரவின்படி நேற்று ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றுவதாக அறிவித்ததலிருந்து ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை பாதுகாத்து கொள்வதில் பல்வேறு வழிகளை கையாள துவங்கினர். சில ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் நாடி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முட்டுகட்டை கொடுத்து வந்தனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி தள்ளிகொண்டே போனது. இந்நிலையில் நேற்று கலெக்டரின் அதிரடி உத்தரவால் நெடுஞ்சாலை துறையினர், வருவாய்துறையினர், ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் ஒத்துழைப்புடன் பட்டணம்காத்தான் தேசிய நெடுஞ்சாலை கிழக்கு கடற்கரை சாலை துவங்கும் இடம் முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவங்கினர். ஆக்கிரமிப்பு பணிகள் துவங்கியதை அறிந்தவுடன் ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள கடைகள், ஓட்டல்கள், கமர்சியல் காம்ளஸ்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கூரைகளை வேகமாக தாங்களே அகற்றி மறைவான இடத்தில் வைத்து கொண்டனர். பாரதிநகரில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் 25 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த எட்டு கடைகள் கொண்ட மாடியுடன் இருந்த கமர்சியல் காம்பளக்சை புல்டோசர் மூலம் இடித்து அகற்றினர். 25 ஆண்டுகளாக கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து கொண்டிருந்த கட்டடம் இதுவரை அகற்றப்படாமல் இருந்தது குறித்து பொது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும் தொடர்ந்து நடக்கும் ஆக்கிரமிப்பு பணி பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு மீண்டும் ஏற்படும் என சந்தேகப்படும் இடங்களில் மரகன்றுகளை நட மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்.