Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோபி பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 15.06.2010

கோபி பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கோபிசெட்டிபாளையம்: கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்த ஆக்கிரமிப்பு மற்றும் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை நகராட்சி ஊழியர்கள் நேற்று திடீரென அப்புறப்படுத்தினர். ஈரோட்டுக்கு அடுத்தபடியாக கோபி பஸ் ஸ்டாண்டு மாவட்டத்தில் மிகப்பெரிய பஸ் ஸ்டாண்டாக திகழ்கிறது. கல்வி நிறுவனங்கள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள கோபி நகரைத்தான், சுற்றியுள்ள கிராம மக்கள் அன்றாட தேவைக்கு நாடுகின்றனர்.

புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் கொண்ட கோபிக்கு வெளியூர் பயணிகளும் ஏராளம் வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புக்கு பஞ்சமில்லை. கடைக்காரர்கள் பிளாட்ஃபாரம் வரை தங்கள் பொருட்களை கடை பரப்பி வைத்திருப்பதால், பயணிகள் நிற்கவும், நடமாடவும் முடியாமல் தவிக்கின்றனர். போதாத குறைக்கு கடை உரிமையாளர்கள், கடை பணியாளர்கள் தங்கள் வாகனங்களை பிளாட்ஃபாரத்தில் நிறுத்தி வைத்துக் கொள்கின்றனர். "பஸ் ஸ்டாண்டுக்குள் பெருகி விட்ட ஆக்கிரமிப்பை அகற்றுமாறு' நகராட்சி கூட்டங்களில், பல்வேறு கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களும் வலியுறுத்தினர்.

பஸ் ஸ்டாண்டில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள், நகராட்சி நிர்வாகம் போட்ட எல்லை கோட்டைக் தாண்டி கடைகளை வைத்துள்ளதாகவும், சில கடைகளை சேர்ந்த ஊழியர்கள், பஸ்ஸுக்காக காத்திருக்கும் பொதுமக்களை நிற்க விடாமல் விரட்டுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். நேற்று காலை 11.15 மணிக்கு கோபி நகராட்சி கமிஷனர் குப்பமுத்து, தாசில்தார் பன்னீர் செல்வம், சுகாதார அலுவலர் ஆறுமுகம், ஆர்.., வெங்கடேஷ் ஆகியோர் கோபி பஸ் ஸ்டாண்ட்டுக்கு திடீர் "விசிட்' அடித்தனர்.

அப்போது, நகராட்சி நிர்வாகம் போட்டிருந்த எல்லைக் கோட்டுக்கு வெளியே இருந்த கடைகளை, தள்ளி வைக்குமாறு எச்சரிக்கை விடுத்தனர். சில கடைகளில் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பொருட்களை நகராட்சி ஊழியர்களே கடைக்குள் தள்ளி வைத்தனர். பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும், நகராட்சி ஊழியர்கள் லாரி மூலம் அள்ளிச் சென்றனர். கோபி பஸ் ஸ்டாண்டில் ஒரு மணி நேரம் பரபரப்பாக இருந்தது.