Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொது இடங்களிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF
 தினமணி 15.06.2010

பொது இடங்களிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி, ஜூன் 14: திருச்சியின் முக்கிய சாலைகளில் பொது இடங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

பொது இடங்கள் மற்றும் அரசு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வழிபாட்டுத் தலங்களை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில நாள்களுக்கு முன்பு மேலரண் சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 2 விநாயகர் கோயில்கள், ஆஞ்சநேயர் கோயில் ஒன்று ஆகியவற்றை இடித்துத் தள்ளினர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம் காட்டக் கூடாது, மாநகரில் மற்ற பொது இடங்களில் செய்யப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் எனக் கோரி, பாரதீய ஜனதா கட்சியினர் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறை ஆகியவை இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை திங்கள்கிழமை மேற்கொண்டன.

திருச்சி ராமகிருஷ்ணா திரையங்கு பகுதியில் மேம்பாலத்திலிருந்து மதுரைச் சாலை செல்லும் வழியில் வலதுபுற அணுகுசாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ஹஜ்ரத் சையது மஸ்தான் அவுலியா, பாலக்கரை மேம்பாலத்தின் கீழ் பருப்புக்காரத் தெருவுக்கு செல்லும் சாலையின் முகப்பில் உள்ள பரித் அவுலியா, அருணாசலம் மன்றம் எதிரில் உள்ள தர்கா ஆகியவற்றை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்துத் தள்ளினர்.

இது போல, கே.கே.நகர் சாத்தனூர் சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த முருகன் கோயிலை அதிகாரிகள் இடிக்கச் சென்ற போது, கோயில் நிர்வாகத்தினர் தாங்களாகவே அகற்றிக் கொள்ளவதாக தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) . தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மேற்பார்வையிட்டனர்.

நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அம்பேத்கர், உதவிப் பொறியாளர் பூபாலன் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியிலும்,மாநகரக் காவல் துணை ஆணையர்கள் ரூபேஷ்குமார் மீனா, தமிழ்ச் சந்திரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டனர்.

போக்குவரத்து மாற்றம்: ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்ற போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, ராமகிருஷ்ணா மேம்பாலம், அருணாசலம் மன்றம் ஆகிய இடங்களில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.

பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்: மாநகராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலைகளை உலகத் தரத்துக்கு இணையாக நவீன முறையில் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றன.

எனவே, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தாற்காலிக, நிரந்தரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்துவிதமான ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றி, மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரும் நபர்களுக்கு, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு வேண்டிய உதவிகள் மாநகராட்சி மூலம் செய்து தரப்படும் என்றார் அவர்.

தமுமுக கோரிக்கை: பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதாகக் கூறி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் வேறு எந்தவிதமான அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளையும் வைக்கக் கூடாது என, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமுமுகவின் மாவட்டச் செயலர் பைஸ் அகமது கூறியது:

பொது இடங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதாகக் கூறி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த இடங்ளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.

அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை இந்த இடங்களில் வைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் நிச்சயம் போராட்டம் நடத்துவோம் என்றார் பைஸ் அகமது.