Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதுகையில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் "அதிரடி'

Print PDF

தினமலர் 16.06.2010

புதுகையில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் "அதிரடி'

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இரண்டாவது நாளாக நேற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்ரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். புதுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகளும் மிகுந்த பரிதவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நகரின் முக்கியப் பகுதிகளான பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், கீழ ராஜவீதி, தெற்கு நான்காம் வீதி, வடக்கு ராஜவீதி, மேல ராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதைகள் மற்றும் சாலைகளை ஆக்ரமித்து ஏராளமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளது.

காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலைகளை கடந்துசெல்ல முற்படும் வாகனங்கள் ஒருமணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் அணிவகுத்து நிக்கவேண்டிய கட்டாய நிலை உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டச் சில சாலைகளை வழிமறித்து வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதால் பாதசாரிகளுக்கு அந்த சாலைகளை கடந்துசெல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஆக்ரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் கடை உரிமையாளர்கள் நீதிமன்ற தடை ஆணையை காட்டி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் சம்பவம் தொடர்கிறது.

இதற்கிடையே பாதாள சாக்கடை பணிகளைத் தொடர்ந்து நகரின் பிரதான சாலைகள் அனைத்தும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் மட்டுமின்றி வி..பி., க்களின் கார்கள் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்துசெல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது. இதையடுத்து சாலையோர ஆக்ரமிப்புகளை முழுமையாக அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வியாபாரிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே பழையபஸ் ஸ்டாண்டில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் உள்ள ஆக்ரமிப்புகள் அனைத்தையும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். ஆக்ரமிப்பிலிருந்து அந்த இடத்தை பாதுகாக்கும் விதமாக கான்கிரீட் மூலம் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்ரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்தது. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள அண்ணாதுரை சிலை அருகே ரோட்டை ஆக்ரமித்து கட்டப்பட்டிருந்த ஹோட்டல், ஜூஸ் கடை ஆகியவற்றை ஜே.சி.பி., உதவியுடன் நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர்.

நகர்ப்பகுதி முழுவதும் ஆக்ரமிப்பு முழுமையாக அகற்றும்வரை இதே நடவடிக்கை மேலும் தொடர நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு கடை உரிமையாளர் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், வாகன ஓட்டி மற்றும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்புள்ளது.