Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செங்கல்பட்டில் 31ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

Print PDF

தினமலர் 22.07.2010

செங்கல்பட்டில் 31ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அமைந்துள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் செங்கல்பட்டு நகர் வழியே சென்று வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தவிர்க்க, 15 ஆண்டுகளுக்கு முன்பு பை-பாஸ் சாலை அமைக்கப்பட்டது. பஸ் தவிர லாரி, வேன், கார் என அனைத்து வாகனங்களும் பை-பாஸ் சாலை வழியே சென்றன.

அதன்பின் போக்குவரத்துக் கழகங்கள் பஸ்களை எக்ஸ்பிரஸ், பை-பாஸ் ரைடர் என பெயரை மாற்றி இயக்கி, பஸ்கள் நகருக்குள் வராமல் பை-பாஸ் சாலையிலேயே செல்ல வைத்தன. தற்போது சாதாரண பஸ்கள் மட்டுமே நகருக்குள் வந்து செல்கின்றன.எனினும், பழைய பஸ் நிலையம் முதல், அரசு மருத்துவமனை வரை நெடுஞ்சாலையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ளதால், சாலை குறுகி விட்டது. பஸ் நிலையமும், போக்குவரத்துக் கழக பணிமனையும் அருகருகே இருப்பதால், பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியாமலும், பணிமனைக்கு உள்ளே செல்ல முடியாமல்,போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. கடைகளின் ஆக்கிரமிப்பால், சாலை குறுகி பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் சாலையில் நிற்க வேண்டியுள்ளது. எனவே நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானித்தனர். வருவாய் துறையினர் உதவியுடன் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களை அளந்து குறியீடு செய்தனர். அதன்பின், ஆக்கிரமிப்பில் உள்ள 250 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

21ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நோட்டீஸ் அனுப்பியதால், நேற்று முன்தினமே வியாபாரிகள் தங்கள் கடைகளின் முன்பிருந்த பந்தல்களை பிரித்தனர்.இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் லோகநாதன், உதவி கோட்டப் பொறியாளர் முகந்தன் ஆகியோர் தாசில்தார் வெங்கடேசன், மின்வாரிய உதவிப் பொறியாளர் மோகன், நகராட்சி கட்டட ஆய்வாளர் வெங்கடேசன், செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியழகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.ஆலோசனையின் போது, நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை வரும் 31ம் தேதி அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன், நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளின் மின் இணைப்புகளை துண்டிக்கும்படி மின்வாரியத்தினரிடம் தெரிவித்தனர். நகராட்சி சார்பில் குத்தகைக்கு விடப்பட்ட நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள பங்குகளை அகற்றும்படி நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதே போல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி போலீசாரிடம் தெரிவித்தனர்.