Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அமைச்சர் அசோக் உறுதி பெங்களூர் ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினகரன் 26.07.2010

அமைச்சர் அசோக் உறுதி பெங்களூர் ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பெங்களூர், ஜூலை 26:பெங்களூரில் ஏரிகள், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகள் அனைத்தும் விரைவில் அகற்றப்பட்டு நிலம் மீட்கப்படும் என்று அமைச்சர் அசோக் தெரிவித்தார்.

பெங்களூர் கமிஷனர் சித்தையா மற்றும் அதிகாரிகளுடன் நேற்று அமைச்சர் அசோக் நகர்வலம் மேற்கொண்டார். நகரிலுள்ள ஏரிகள், கால்வாய்களை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 60 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள் ஒரு ஏரியைக் கூட உருவாக்க வில்லை. இருந்த ஏரிகளை கூட சட்ட விரோதமாக பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தான் நகரில் குடிதண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள ஏரி மற்றும் சாக்கடை கால்வாயின் அருகே சட்டவிரோதமாக ஆக்ரமித்திருப்பவர்கள் முக்கிய பிரமுகர் என்றாலும், எந்த கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் என்றாலும் அல்லது தனிப்பட்ட நபர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை செய்ய பின் வாங்காது.

மாநிலம் முழுவதும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை நீர் செல்லும் கால்வாய்களையும், சாக்கடை கால்வாய்களையும் தூர் வாருவதன் மூலம் குடிநீர் பிரச்னையை வரும் காலங்களில் சமாளிக்கலாம். நகரில் பல்வேறு இடங்களில் மேற் கொள்ளப்பட்டுள்ள ஏரி மற்றும் சாக்கடை கால்வாய்களின் தூர்வாரும் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. ஏரிகளை புனரமைப்பதின் மூலம் குடிநீர் பிரச்னையை அதிக அளவில் தீர்க்க முடியும். நகரின் அழகையும் சீர்படுத்த முடியும். இன்னும் 15 நாளில் சாக்கடை கால்வாய்களை சீர்படுத்தி மழைக்காலங்களில் பல பகுதிகள் நீரில் மூழ்குவதை தடுக்கப்படும் என்றார்.