Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பூங்காவிற்குள் வீட்டு சுற்றுச்சுவர் நகரமைப்புத் துறையினர் அப்புறப்படுத்தினர்

Print PDF

தினமலர் 27.07.2010

மாநகராட்சி பூங்காவிற்குள் வீட்டு சுற்றுச்சுவர் நகரமைப்புத் துறையினர் அப்புறப்படுத்தினர்

கோவை:மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இருக்கும் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீட்டுச்சுற்றுச்சுவரை மாநகராட்சி நகரமைப்பு துறையினர் நேற்று இடித்து அப்புறப்படுத்தினர்.

தடாகம் ரோடு ஏ.கே.எஸ்., நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர்கள் விளையாட்டு திடலும் ஒருங்கிணைந்த பூங்காவும் உள்ளது. இப்பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள, இரண்டு சென்ட் பகுதியை பூங்காவிற்கு அருகே உள்ள வீட்டு உரிமையாளர் ஆக்கிரமிப்பு செய்து, வீட்டுச்சுற்றுச்சுவரை அமைத்துக் கொண்டார். மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் கூறியதாவது: பூங்காவிற்கு சொந்தமான இரண்டு சென்ட் இடத்தில் வீட்டுச்சுற்றுவர் கட்டப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளரின் ஆவணங்களையும், மாநகராட்சி ஆவணங்களையும் சரிபார்த்த போது, ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வீட்டு உரிமையாளரிடம் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை விட்டுக்கொடுத்து, சுற்றுச்சுவரை இடித்து அப்புறப்படுத்த பலமுறை மாநகரட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கடைசியாக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. சுற்றுச்சுவர் இடிக்கப்படாததால், நேற்று ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை மாநகராட்சி சிறப்பு அதிரடிப்படையினரை கொண்டு அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று. மாநகராட்சிக்கு சொந்தமான பொது சொத்துக்களை எக்காரணம் கொண்டும் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாம்; பொது சொத்து தனி நபருக்கு சொந்தமாகாது. விசாரணை மற்றும் ஆய்வின் போது எப்படியும் பொதுசொத்து குறித்த தகவல் தெரிந்து விடும். இது போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், என்றார்.