Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஜி.எஸ்.டி., சாலையில் 2வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 02.08.2010

ஜி.எஸ்.டி., சாலையில் 2வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டாம் நாளாக நேற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன.இந்த சாலை குறுகிவிட்டதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. இதை தவிர்க்க, சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். வருவாய் துறையினர் உதவியுடன் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களை அளந்து குறியீடு செய்தனர்.

சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 250 கடைகளுக்கு கடந்த மாதம் 21ம் தேதி, "ஆக்கிரமிப்பு அகற்றப் படும்' என நோட்டீஸ் அனுப்பினர். பின், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.அதன்படி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் லோகநாதன், உதவி கோட்ட பொறியாளர் முகுந்தன், உதவி பொறியாளர் ஆண்ரூஸ் மற்றும் ஊழியர்கள், ஆர்.டி.., லெனின் ஜேக்கப், தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள், போலீஸ் ஏ.எஸ்.பி., சேவியர் தன்ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார், நகராட்சி ஊழியர்கள், மின் வாரிய ஊழியர்கள் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு இரண்டு ஜே.சி.பி., இயந்திரங்களுடன் சாலைக்கு வந்தனர்.மின் ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கட்டடங்களின் மின் இணைப்புகளை துண்டித்தனர். அதன்பின், ஜே.சி.பி., மூலம் புதிய பஸ் நிலையத்திலிருந்து எதிர்புறத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது.வியாபாரிகள், கடைகளில் இருந்த பொருட்களை அவசரமாக அகற்றினர். சில வியாபாரிகள் கடை முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றினர். பஸ் நிலைய நுழைவுப் பகுதியில் நெருக்கடியாக இருந்ததால் அங்கிருந்த இரு கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன. அகற்றவேண்டிய ஆக்கிரமிப்புகள் அதிகமிருந்ததால் இரண்டாவது நாளாக நேற்று ஐந்து ஜே.சி.பி., இயந்திரங்கள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளிட்ட பல ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்