Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழுப்புரம் நேரு வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் முழுமையாக அகற்ற மக்கள் வலியுறுத்தல்

Print PDF

தினகரன் 02.08.2010

விழுப்புரம் நேரு வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் முழுமையாக அகற்ற மக்கள் வலியுறுத்தல்

விழுப்புரம், ஆக. 2:விழுப்புரம் நேருஜி வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து ரயில்வே மேம்பாலம் வரை நேருஜி வீதியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் காந்தி சிலையில் இருந்து மாதா கோயில் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தங்களது பணியை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து துவங்கினர். பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. முன் அறிவிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றக்கூடாது என அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாதிட்டனர். ஆனாலும் ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இதையடுத்து வியாபாரிகள் சிலர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு களை அகற்றிக்கொண்டனர். பலரது கடைகள் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அப்பொருட்கள் லாரியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. ஆக்கிரமிப்புகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களுக்கு இதுவரை விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இம்முறை அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களும் தப்பவில்லை.

விழுப்புரம் நேருஜி வீதியில் பழைய பஸ் நிலையம்&காந்திசிலை வரை ஆக்கிரமிப்புகளால் அதிகஅளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில்தான் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. நேற்றைய ஆக்கிரமிப்பு பணியின்போது இப்பகுதிக்கு யாரும் செல்லவில்லை. பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பாரபட்சம் கூடாது. காந்தி சிலை பகுதியில் நடந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை போன்று பழைய பேருந்து நிலையம்&காந்தி சிலை வரை உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.