Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தர்மபுரியில் சாலையோர காய்கறி கடைகள் அகற்றம் நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

Print PDF

தினகரன் 06.08.2010

தர்மபுரியில் சாலையோர காய்கறி கடைகள் அகற்றம் நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

தர்மபுரி, ஆக.6: போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் ஆக்ரமித்து அமைக்கப்பட்ட காய்கறி கடைகளை நகராட்சி அதிகாரிகள் நேற்று அப்புறப்படுத்தினர்.

தர்மபுரி முகமது அலி கிளப் ரோடு நகர் பேருந்து நிலையம் எதிரே கடந்த பல ஆண்டுகளாக தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கிவந்தது. இங்கு 247 வியாபாரிகள் கடை வைத்திருந்தனர். சந்தை நடக்கும் இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு ரூ. 1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் முடியும் வரை மாற்று இடத்தில் கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கைவிடுத்தனர்.

இதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடைக்கான இடம் ஒதுக்கீடு செய்வதில் தொட ங்கி பல்வேறு பிரச்னைகள் அடுத்தடுத்து நடந்தன. இதற்கிடையே வியாபாரிகள் சிலர், ஏற்கனவே சந்தை நடந்து வந்த பகுதிக்கு அருகே சாலையோரங்களை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை அமைத்தனர்.

அரசு நிதியில் புதிய சந்தை கட்டிடம் கட்டிய பின்பும், அங்கு சென்று வியாபாரம் செய்ய யாரும் முன்வரவில்லை. இதனால் வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தைகள் அனைத்தும் சாலையோரங்களிலேயே நடந்துவந்தன. சாலையோரங்களில் அனுமதியின்றி நடத்தப்படும் கடைகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம், வியாபாரிகளுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையே சாலையோரங்களை ஆக்கிரமித்தும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ள காய்கறிக் கடைகளை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் சாலையோர கடைகளை அகற்றினர். நகராட்சி ஆணையர் அண்ணாதுரை தலைமையிலான ஊழியர்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். சாலையோர கடைகள் அகற்றப்பட்டதால், நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.