Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள்அகற்றம் தடையின்றி போக்குவரத்து பொதுமக்கள் மகிழ்ச்சி

Print PDF

தினகரன் 09.08.2010

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள்அகற்றம் தடையின்றி போக்குவரத்து பொதுமக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம், ஆக. 9: விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் தடையின்றி போக்குவரத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு & ரயில்வே மேம்பாலம் வரை நேருஜி வீதியில் நீடித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையின்றி போக்குவரத்துக்கு வழி வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பின்னர் இறுதி முடிவு எடுக்கப்பட்டு பாரபட்சமில்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த 1ம் தேதி துவங்கியது. காந்தி சிலை & மாதா கோவில் பேருந்து நிறுத்தம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அரசியல் கட்சிகள் கொடி கம்பங்கள், பயன்பாடின்றி கிடந்த தொலைத் தொடர்பு துறை கம்பங்கள் ஆகியவை அடியோடு அகற்றப்பட்டது.

நான்குமுனை சந்திப்பு & காந்தி சிலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள 6ம் தேதி (நேற்று முன் தினம்) வரை கெடு விதிக்கப்பட்டது. வியாபாரிகள் பலர் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்பு களை அகற்றி கொண்டனர்.

இரு பெண் அதிகாரிகள் தலைமையில் நான்குமுனை சந்திப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இரண்டாம் கட்டமாக நேற்று காலை துவங்கியது. வருவாய்த்துறை, நகராட்சி, காவல்துறையினர் துணையாக இருந்தனர். விளம்பர பலகைகள், சாலையில் போடப்பட்டிருந்த சிமெண்ட் தளங்கள் ஆகியவை நகராட்சி பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

இந்நிலையில் பொக்லைன் இயந்திரம் காலை 10 மணியளவில் திடீரென பழுதானது. பின்னர் பழுது பார்க்க கொண்டு செல்லப்பட்டது. பொக்லைன் இயந்திரம் இல்லாததால் பணிகள் பாதித்தது. மாற்று பொக்லைன் இயந்திரம் வரவழைக்கும் முயற்சியில் பெண் அதிகாரிகள் ஈடுபட்டும் பலனில்லை. பழுது சரிபார்க்கப்பட்டதும் நகராட்சி பொக்லைன் இயந்திரம் 11.45 மணிக்கு வந்தது. அதைத்தொடர்ந்து மாற்று பொக்லைன் இயந்திரமும் வந்தது.

2 மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டது. பின்னர் 2 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மண்மேடு கொண்டு மேடை அமைத்திருந்த நடைபாதை பழக்கடைகளும் அகற்றப்பட்டன. அரசியல் கட்சி, சங்க கொடி கம்பங்கள் அடியோடு சாய்க்கப்பட்டது.

முழுமை பெறுமா? மக்கள் எதிர்பார்ப்பு

விழுப்புரம் மக்கள் கூறுகையில், நீண்ட இழுபறிக்கு பிறகு நேருஜி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதோ அந்த நோக்கம் முழுமை பெற வேண்டும். அவ்வாறு முழுமை பெறுமா? அல்லது இல்லையா? என்பது மாவட்ட நிர்வாகம் கையில் உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றியதால் நேருஜி சாலை விசாலமாக காட்சியளிக்கிறது. இதனால் போக்குவரத்து எளிதாக செல்லும். இந்த நிலை நீடிக்க வேண்டும் என்றால் ஆக்கிரமிப்புகள் மீண்டும் தலைதூக்க விடக்கூடாது. இல்லையென்றால் தற்போது நடந்துள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கண் துடைப்பு காட்சியாக அமைந்துவிடும் என்றனர்.