Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மைசூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு

Print PDF

தினகரன் 13.08.2010

மைசூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு

மைசூர், ஆக.13: மைசூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. மைசூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சட்டவிதிமீறல் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம், கடந்த ஞாயிற்றுகிழமை துவக்கியது. சட்டவிதிமீறல் கட்டிட இடிப்புப்பணி கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்துள்ளது. மைசூரில் மேற்குபகுதியில் அமைந்துள்ள 4.5 கிமீ நீளமுள்ள பூர்னையா கால்வாய் வட்டாரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. போகடி இரண்டாவது ஸ்டேஜ் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருந்த சட்டவிதிமீறல் கட்டிடங்களை ஜே.சி.பி.மெஷின் துணையுடன் மாவட்ட நிர்வாக ஊழியர்கள் இடித்துதள்ளினர். 6 வீடுகள் இடிக்கப்பட்டன. இதை கண்டித்து கவுன்சிலர் புஷ்பலதா, முன்னாள் மேயர் டி.பி.சிக்கண்ணா போராட்டம் நடத்தினர். இடிக்கப்படும் வீடுகளில் வசிப்போர் ஏழைகள் என்பதால், பணியை நிறுத்துமாறு பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வீடுகளை உடனடியாக காலி செய்ய இரண்டு நாட்கள் அனுமதி அளிப்பதாக உதவி கலெக்டர் பாரதி தெரிவித்தார். ஹரலையா பகுதியில் அரை ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தென்னந்தோப்பு வெட்டப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நிலத்தை சுற்றி போடப்பட்டிருந்த வேலியும் அகற்றப்பட்டது. சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து மனைபோட்டு விற்பனை செய்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கலெக்டர் பாரதி தெரிவித்தார்.