Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை விமான நிலையம் ரூ.300 கோடியில் விரிவாக்கம் : 400 வீடுகளை அகற்ற முடிவு

Print PDF

தினமலர் 20.08.2010

கோவை விமான நிலையம் ரூ.300 கோடியில் விரிவாக்கம் : 400 வீடுகளை அகற்ற முடிவு

கோவை : ""கோவை விமான நிலையம் 300 கோடி ரூபாய் மதிப்பில் விரிவுபடுத்தப்படும்; இதற்காக 400 வீடுகள் அகற்றப்பட உள்ளன,'' என, கோவை கலெக்டர் உமாநாத் தெரிவித்தார்.

கோவை மாவட்ட திட்டக்குழுக் கூட்டம், கலெக்டர் உமாநாத் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கோவை விமான நிலைய விரிவாக்கம் பற்றி முதலில் விவாதம் எழுந்தது. தற்போதுள்ள விமான நிலையம் விரிவாக்கப்படுமா அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்து கலெக்டர் பேசியதாவது:

கோவை விமான நிலையத்தை 300 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நகர வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தொழில் முன்னேற்றத்துக்காகவும் சர்வேதேச விமான நிலையமாக மாற்ற இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யும் அதே நேரத்தில் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு இல்லாத வகையில், இந்த திட்டம் நிறைவேற்றப்படும். விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு, 848 ஏக்கர் பரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெருமளவு குடியிருப்புகள் இடிபடும் என்பதால் மறு ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, 816 வீடுகளை இடித்து அகற்ற வேண்டுமென்ற நிலை இருந்தது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து, விரிவாக்கப் பகுதி குறைக்கப்பட்டது. இறுதியாக 613 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, 400 வீடுகளை அகற்ற முடிவு செய்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 8 ஏக்கர் பரப்பைக் குறைத்தால், மேலும் 100 வீடுகள் அகற்றுவதைத் தவிர்க்க முடியும். ஆனால், சர்வதேச விமான ஓடுதளம் (ரன்வே) அமைக்க முடியாது.

எனவே, இந்த திட்டத்தில் வேறு மாற்றங்கள் எதுவும் செய்ய வாய்ப்பில்லை. விமான நிலைய விரிவாக்கத்தினால் அவிநாசி ரோட்டுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. ஏனெனில், விமான நிலையத்துக்கான நுழைவாயில், அணுகுசாலை ஆகியவை, எல் அண்ட் டி பை-பாஸ் ரோடு அருகில் அமையும்.

இந்த சாலையை விமான நிலைய ஆணையமே அமைத்துக் கொள்ளும். அதனால், அவிநாசி ரோட்டில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசல் மேலும் குறையும் வாய்ப்புண்டு. இந்த விரிவாக்கத்தில் அவிநாசி ரோடு மற்றும் அதையொட்டியுள்ள குடியிருப்புகள் எதுவும் பாதிக்கப்படாது. விமான நிலைய விரிவாக்கத் திட்டம், அரசின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கும். தற்போதுள்ள விமான நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு, கலெக்டர் உமாநாத் தெரிவித்தார்.

கோவை விமான நிலைய இயக்குனர் பீட்டர் ஆபிரஹாம் பேசுகையில், ""கோவை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மாறுவதால் நகர வளர்ச்சிக்கு பெரிதும் பயன் கிடைக்கும். எனவே, அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.

எந்தெந்த குடியிருப்புகள் பாதிக்கப்படும் என்பது பற்றி கூட்டத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை. மாவட்ட ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரன், உறுப்பினர்கள் செந்தில்குமார், சுப்ரமணியம், கணேசமூர்த்தி, சுப்பையன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.