Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையை அகற்ற உத்தரவு

Print PDF

தினகரன் 31.08.2010

சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையை அகற்ற உத்தரவு

நாமக்கல், ஆக.31: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தலைமை தாங்கி மாவட்ட ஆட்சியர் சகாயம் பேசியதாவது: நகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் அதிகளவில் வைக்கப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். நாமக்கல் கமலாயகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் பள்ளி, கல்லூரிகள் இருப்பதால் வாகனங்கள் தற்போது பெருகி உள்ளது. சாலைகளில் வாகன போக்குவரத்தை சீர்செய்வது மிகவும் அவசியம். காவல்துறையினர் வாகன போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலக மதில்சுவர் மற்றும் அரசு அலுவலக சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது தடுக்கப்பட வேண்டும். நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறும்போது சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் சாலைகளை சமன் செய்திட வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் மணல் லாரிகள் நகருக்குள் வருவதை தடுக்க வேண்டும்.

சாலை விதிகள், பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து விபத்துகளை முற்றிலும் தடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சகாயம் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாரி, வருவாய் கோட்டாட்சியர்கள் சடையாண்டி, ராமசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பெரியசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜ்கபூர், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் நித்தியானந்த சேகர், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி, மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.