Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போடி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமணி 04.09.2010

போடி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

போடி, செப். 3: போடி அருகே பேரூராட்சி நிர்வாகம் பாரபட்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

போடியை அடுத்த மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி வினோபாஜி காலனி 2-ம் வார்டில் ஆதி திராவிடர் நலத் துறைக்குச் சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலம் எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பேரூராட்சி சாலையும் உள்ளது.

இப்பகுதியைச் சேர்ந்த சிலர் நத்தம் புறம்போக்கு நிலங்களையும், சாலையையும் ஆக்கிரமிப்பு செய்துள்னர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, இந்த நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும். இப்பகுதியில் வாடகைக் கட்டடங்களில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள், குழந்தைகள் சத்துணவு மையம் ஆகியவற்றிற்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினர். இதில் குடிசை வீடுகள், கான்கிரீட் வீடுகள் உள்ளிட்டவை இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

அப்போது தேனி மாவட்ட ஆதி திராவிடர் நலத் துறை வட்டாட்சியர் முருகேஸ்வரி, போடி வட்டாட்சியர் சு.ராஜசேகரன், மண்டல துணை வட்டாட்சியர் மணிமாறன், வட்ட துணை சர்வேயர் மாணிக்கவாசகம், ஆதி திராவிடர் நலத் துறை சர்வேயர் சோணை, வருவாய் ஆய்வாளர் ரத்தினம், கிராம நிர்வாக அலுவலர் ஜி.கண்ணன், மேலச்சொக்கநாதபுரம் நிர்வாக அலுவலர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

இந் நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் வழங்காமல் திடீரென வீடுகளை இடித்துவிட்டதால் சாலையில் வசிப்பதாகவும், ஆக்கிரமிப்புகளை ஒருதலைப்பட்சமாக அகற்றியுள்ளதாகவும், தங்களது பட்டாக்களில் சர்வே எண்கள் மாறியுள்ளதால் தவறுதலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்ததாகவும், இதை பேரூராட்சி நிர்வாகமும் ஆய்வு செய்து வீட்டு வரி விதித்துவிட்டு தற்போது ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்துவிட்டதாகவும், ஆரம்பத்திலேயே நாங்கள் வீடு கட்டும்போதே தடுத்திருந்தால் தங்களுக்குப் பட்டா வழங்கிய நிலங்களில் வீடு கட்டியிருப்போம் என்றும் பேரூராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி தெரிவித்தனர்.

இது குறித்து பேரூராட்சி நிர்வாக அலுவலர் கூறும்போது, ஆக்கிரமிப்பை அகற்ற தனிப்பட்ட முறையில் யாருக்கும் அறிவிப்பு வழங்கவில்லை. பொதுவாகத் தண்டோரா செய்தோம். அவர்கள் தங்கள் பட்டா நிலங்களில் வீடு கட்டி வசிக்கலாம் என்றார்.

ஆக்கிரமிப்பு அகற்றலின்போது தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (போடி புறநகர் பொறுப்பு) கல்யாணக்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.