Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அல்சூர் சோமேஸ்வரர் கோயில் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Print PDF

தினமணி 09.09.2010

அல்சூர் சோமேஸ்வரர் கோயில் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

பெங்களூர், செப்.8: அல்சூர் சோமேஸ்வரர் கோயில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் இடித்துத் தள்ளப்பட்டன.

பெங்களூர் அல்சூரில் மிகவும் பழமையான புகழ்பெற்ற சோமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் சுற்றுப்புற பகுதிகளில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் கட்டப்பட்டிருந்தன.இக்கடைகள் பல ஆண்டுகளாக இங்கேயே உள்ளன.

இதனால் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவந்தது. கடந்த மாதம் இக்கோயிலுக்குச் சென்ற முதல்வர் எடியூரப்பாவிடம் பொதுமக்கள் இது பற்றி புகார் அளித்தனர். ஏற்கெனவே இந்தக்கடைகளை அகற்ற நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டிருப்பதாக முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்தன.

இதையடுத்து அக்கடைகளை அகற்றி கோயில் பகுதியை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கும்படி எடியூரப்பா உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 8 மணி அளவில் அறநிலையத்துறை, பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையம், பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சோமேஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர்.

அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். துணி, பாத்திரம், பழம், பூக்கடைகள் அதிக அளவில் இருந்தன. மொத்தம் 40-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. கடைகளை அகற்ற வியாபாரிகள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும் போலீஸôரின் உதவியுடன் கடைகள் அகற்றப்பட்டன.