Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பகதூர் ஷா சபர் மார்க்கில் நவீன கழிப்பிட வளாகத்தை மாநகராட்சி இடித்து தள்ளியது

Print PDF

தினகரன் 17.09.2010

பகதூர் ஷா சபர் மார்க்கில் நவீன கழிப்பிட வளாகத்தை மாநகராட்சி இடித்து தள்ளியது

புதுடெல்லி, செப். 17: மாநகராட்சியின் ஏல நடவடிக்கைகளில் பங்கேற்காமல் நவீன கழிப்பிட வளாங்கத்தை தனியார் கட்டுமான நிறுவனம் கட்டியது. விதி மீறி கட்டப்பட்ட கழிப்பிட வளாகத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

காமன்வெல்த் போட்டியை முன்னிட்டு, டெல்லியின் பல்வேறு இடங்களில் நவீன கழிப்பிட வளாகங்களைக் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. அதற்கான அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டபோது, 28 கட்டுமான நிறுவனங்கள், கழிப்பிட வளாகங்களைக் கட்டித் தர விண்ணப்பித்தன.

அதைத் தொடர்ந்து, 28 நிறுவனங்களுக்கும் கழிப்பிட வளாகம் கட்டுவதற்கான இடங்களை மாநகராட்சி ஒதுக்கித் தந்து, மாதிரி வடிவத்தை உருவாக்கிக் காட்டும்படி கேட்டுக் கொண்டது. மாதிரி வடிவங்களை வல்லுனர்கள் குழு பார்வையிட்டு ஒப்புதல் அளித்தது.

அதன்பிறகு, ஏல நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டது. ஆனால், 28 நிறுவனங்களும் அதில் பங்கேற்கவில்லை. வெறும் 8 நிறுவனங்களே டெண்டர் நடவடிக்கைகளில் பங்கேற்று, அனைத்து ஆவணங்களையும் மாநகராட்சியிடம் சமர்ப்பித்தது.

அதனால், அந்த 8 நிறுவனங்களுக்கு மட்டுமே நவீன கழிப்பிட வளாகங்களை கட்டுவதற்கு மாநகராட்சி அனுமதி வழங்கியது. ஆனால், ஏல நடவடிக்கையில் பங்கேற்காத 20 கம்பெனிகளில் சில நிறுவனங்களும்கூட, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் கழிப்பிட வளாகத்தை கட்டத் தொடங்கின.

அந்த வகையில் பகதூர் ஷா சபர் மார்க்கில் ஒரு கட்டுமான நிறுவனம் நவீன கழிப்பிட வளாகத்தை கட்டத் தொடங்கி, 50 சதவீத பணிகளை முடித்து விட்டது. இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அந்நிறுவனம் மாநகராட்சி விதிகளின் அடிப்படையில் டெண்டர் நடவடிக்கைகளில் பங்கேற்காமலேயே கட்டிடத்தை கட்டுவது தெரியவந்தது. அதனால் அந்த கட்டிடத்தை இடித்துத் தள்ள மாநகராட்சி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, கழிப்பிட வளாகக் கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தரைமட்டமாக்கினர்.

இதுபற்றி மாநகராட்சி உயரதிகாரி கூறுகையில், "இந்நிறுவனத்தைப் போலவே மேலும் பல நிறுவனங்கள், மாநகராட்சியின் ஏல நடவடிக்கையில் பங்கேற்காமல் கழிப்பிட வளாகங்களை கட்டி வருகின்றன. அதுபோன்ற விதி மீறி கட்டப்பட்ட வளாகங்கள் அனைத்தும் இடித்துத் தள்ளப்படும்" என்றார்.