Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்பு

Print PDF

தினமலர் 21.09.2010

மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்பு

கொடுங்கையூர் : மாநகராட்சிக்கு சொந்தமான, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறரை கிரவுண்டு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. கொடுங்கையூர் சின்னான்டி மடம் அருகில் உள்ள தென்றல்நகர் இரண்டாவது மற்றும் மூன்றாவது தெருக்களில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஆறரை கிரவுண்டு நிலம் உள்ளது.

இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இங்கு சிறுவர் பூங்கா அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இந்த இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமித்தனர். அங்கு சிறிய சிறிய அளவில் குடிசைகள் கட்டி கூலித் தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விட்டனர். இதற்காக மாதம் 500 ரூபாய் வாடகையும், 3,000 ரூபாய் வரை முன்பணமும் அவர்கள் பெற்றிருந்தனர். இந்த இடம் தொடர்பாக நடந்துவந்த வழக்கில் மாநகராட்சிக்கு சாதகமாக கடந்தாண்டு தீர்ப்பு வந்தது.

இருப்பினும் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றாததால், ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து அந்த இடத்தை வாடகைக்குவிட்டு வருமானம் பார்த்து வந்தனர். இடத்தை காலி செய்யுமாறு மாநகராட்சி மண்டல அதிகாரிகள் தரப்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் குடிசைகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர். மேயர் சுப்ரமணியம், கமிஷனர் ராஜேஷ் லக்கானி உத்தரவின்படி, உதவி செயற்பொறியாளர் ஜார்ஜ் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் அங்கு நேற்று சென்றனர். பொக்லைன் வாகனங்கள் உதவியுடன் அங்கிருந்த குடிசை ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.

குடிசைகளில் வாடகைக்கு தங்கி இருந்த கூலித்தொழிலாளர்கள் தங்கள் உடமைகள் மற்றும் குழந்தைகளுடன் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். அப்போது திடீரென மழை பெய்ததால் ஒதுங்க இடம் கிடைக்காமல் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கொடுத்த முன்பணம் மற்றும் வாடகை பணத்தை திரும்பத் தரும்படிக் கூறி ஆக்கிரமிப்பாளர்களை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க எம்.கே.பி., நகர் உதவி கமிஷனர் பாலச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். மீட்கப்பட்ட நிலத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடராமல் இருக்க அந்த இடத்தை மக்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி மேயருக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Tuesday, 21 September 2010 08:43