Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் தகர்ப்பு ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிரடி

Print PDF

தினகரன் 23.09.2010

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் தகர்ப்பு ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிரடி

ஊட்டி, செப். 23: ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் சார்பில் சில கடைகள் கட்டப்பட்டன. அதே பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை கட்டினர். இதனால், மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் ஆக்கிரமிப்பு அதிகரித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. ஆக்கிரப்புக்களை அகற்ற பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதனால், இந்த கடைகளை அகற்றும்படி வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், கடைக்காரர்கள் காலி செய்யவில்லை. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் இருந்த பெட்ரோல் பங்க் உட்பட சில கடைகளை வருவாய்த் துறை அதிரடியாக அகற்றியது. ஆனால், அதே பகுதியில் உள்ள சில ஆக்கிரமிப்பாளர்கள் கடை களை காலி செய்ய முடியாது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நகராட்சி மற்றும் வாருவாய்த்துறைக்கு சாதகமான தீர்ப்பை அளித்தது. மேலும், கடந்த 2007ம் ஆண்டே கடைகளை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால், அவர்கள் காலி செய்யாமல் காலம் கடத்தி வந்தனர். மேலும், இவர்களுக்கு ஆதரவாக நகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால், இப்பகுதியில் உள்ள கடைகளை அகற்றுவதில் நகராட்சி மற்றும் வருவாய்த்துறைக்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும், இப்பகுதியில் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.75 லட்சம் செலவில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பாலம் கட்டும் பணிக்கு இடை யூறாக சில கடைகள் உள்ளதால், அவற்றை அகற்றினால் மட்டுமே பாலம் கட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால், நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறையிடம் கடைகளை அகற்றி தருமாறு கோரிக்கை வைத்தது.

அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அப்பகுதியில் உள்ள ஆக்கரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்தது. முதல்கட்டமாக ஆக்கிரமிப்பு கடைகளை காலி செய்யும் படி உத்தரவிட்டது. எனினும், ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்ய தொடர்ந்து காலம் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற போலீஸ் பாதுகாப்புடன் நேற்று வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் வந்தனர். அவர்களை அகற்ற விடாமல், கடை வைத்திருந்தவர்கள் முற்றுகையிட்டனர். கடைகளை காலி செய்ய மதியம் ஒரு மணி வரை இரு துறைகளும் அவகாசம் அளித்தது. இதனை தொடர்ந்து சிலர் கடைகளை காலி செய்தனர். சிலர் காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

ஆனால், மதியம் ஒரு மணிக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் அப்பகுதியில் உள்ள கடைகளை அகற்றும் பணி துவங்கியது. நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிரடியாக களத்தில் இறங்கியவுடன் அங்கு கடை வைத்துள்ளவர்கள் கடைகளை காலி செய்யத்துவங்கினர். மாலை 4 மணிக்குள் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அனைத் தும் இடித்து தள்ளப்பட்டன. நெடுஞ்சாலைத் துறை மூலம் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டு மான பணிக்கு இருந்த இடையூறு நீங்கியதால் விரைவில் பாலம் கட்டும் பணி முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக மத்திய பஸ் நிலையம் முன் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் இப்போது மத்திய பஸ் நிலையம் `பளிச்` என இருக்கிறது.