Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பகுதியில் ரிசர்வ் சைட்கள் மீட்கப்படுமா?

Print PDF

தினமலர் 24.09.2010

மாநகராட்சி பகுதியில் ரிசர்வ் சைட்கள் மீட்கப்படுமா?

திருப்பூர் : வரும் 2011ல் எட்டு உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, மாநகராட்சி எல்லை விரிவடைய உள்ளது. மேலும், சில உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க ஆலோசனை நடக்கிறது. ஆனால், மக்கள் அடர்த்திக்கு ஏற்ப பூங்காக்கள் இல்லை. மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட ரிசர்வ் சைட்கள் ஆக்கிரமிக்கப்படாமல் உள்ளனவா என்று ஆய்வு செய்ய வேண்டும்; அப்பகுதியில் பூங்காக்கள் அமைக்க முயற்சிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பாசனம் பெறும் வேளாண் நிலங்கள் லே-அவுட்களாக மாறி வருகின்றன. விவசாய நிலப்பரப்பை மனையிடமாக மாற்ற, நில உபயோக மாற்றம் செய்ய வேண்டும். பின், லே-அவுட் பிரித்து, ரோடு, ரிசர்வ் சைட் உள்ளிட்ட நடைமுறைகளை தானப்பத்திரம் மூலமாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஐந்து ஏக்கருக்கு உட்பட்ட லே-அவுட் ஆக இருந்தால், திருப்பூர் உள்ளூர் திட்டக்குழுமத்தில் அனுமதி பெற வேண்டும். உள்ளூர் திட்டக்குழும பகுதிகளை தவிர்த்த பிற பகுதிகளில், கோவை நகர ஊரமைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். ஐந்து ஏக்கருக்கும் அதிகமான பரப்பாக இருப்பின், சென்னை நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் (சி.எம்.டி..,) அலுவலகத்தில் அனுமதி தேவை பெற வேண்டும். திருப்பூரில் இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.அனுமதி பெறப்பட்டு உருவாக்கப்பட்ட லே-அவுட்களிலும், ரிசர்வ் சைட்கள் முறையாக ஒப்படைக்கப்படுவது இல்லை. இரண்டு ஆண்டுக்கு முன், 118 லே-அவுட்கள் திருப்பூர் மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்பட்டன. அவற்றுக்கு தற்போதுதான், 40 கோடி ரூபாய் மதிப்பில் வடிகால் வசதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரிசர்வ் சைட்கள், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் இருக்கிறா என்பதையும் மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பதில்லை; எத்தனை ரிசர்வ் சைட்கள் உள்ளன என்ற புள்ளிவிவரம் கூட, மாநகராட்சி வசமில்லை. மக்கள் அடர்த்தி நிறைந்த திருப்பூரில் போதிய பூங்காக்கள் இல்லை. விரிவுபடுத்தப்பட உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், பூங்காக்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இது போதுமானதாக இல்லை. ரோடு விரிவுபடுத்தவோ, பூங்காக்கள் அமைக்கவோ, குழந்தைகள் விளையாட மைதானம் அமைக்கவோ இடமில்லாத சூழலே நிலவுகிறது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.

இதில், பூங்காவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாலும், அதற்கு முன், லே-அவுட்களால் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட ரிசர்வ் சைட்களை மாநகராட்சி நிர்வாகம் மீட்டு பாதுகாக்க வேண்டும். ரிசர்வ் சைட்கள், ஏமாற்றி விற்கப்பட்டு இருக்கவும், பெரும்பான்மையான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கவும் வாய்ப்பு அதிகம். திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாட்டை தவிர்க்க லட்சக்கணக்கான மரங்கள் தேவை. ஏற்கனவே மரங்கள் இல்லாவிட்டாலும், தற்போது புதிதாக நட முன்வரலாம். அதற்காக, ரிசர்வ் சைட்கள் பற்றிய கணக்கெடுப்பு அவசியம். ரிசர்வ் சைட்களையும், மாஸ்டர் பிளானில் உள்ள திட்டச்சாலை, இணைப்புச்சாலை இடங்களையும் மீட்க வேண்டும். அவற்றில் ரோடுகள் மற்றும் பூங்காக்களை அமைக்கவும் முயற்சி எடுக்க வேண்டும்.